மத்திய பட்ஜெட்டைப் பற்றி இராமதாசு, திருமாவளவன் சொல்வது என்ன?

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண் திட்டங்கள், வருமானவரி குறைப்புக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள பா.ம.க., தனியார்மயம் கைவிடப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.


விடுதலைச்சிறுத்தைகள் கட்சியோ, ‘அதளபாதாளத்தில் சரிந்துகிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் கொண்டிருக்கவில்லை’ எனக் கருத்துத் தெரிவித்துள்ளது.

பா.ம.க. நிறுவனர் இராமதாசு: 

” மீன் வளம், பால்வளம் ஆகியவற்றை பெருக்குதல், மாநில அரசுகளின் உதவியுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்பன உள்பட்ட மத்திய அரசின் 16 அம்சத் திட்டம் வேளாண் வருமானத்தைப் பெருக்க உழவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வேளாண்மை மற்றும் அவை சார்ந்த துறைகள், பாசனம் , ஊரக வளர்ச்சி ஆகியவற்றுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2.83 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

இவற்றில் விவசாயம், பாசனம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 1.51 லட்சம் கோடியில் இருந்து 1.60 லட்சம் கோரியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.40 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.23 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படாதது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கக்கூடும்.

கல்விக்கான ஒதுக்கீடு ரூ.99,300 கோடியாகவும், சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.69,000 கோடியாகவும் உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை & பெங்களூர் அதிவிரைவுச் சாலை அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, 27,000 கி.மீ நீளத்திற்கு தொடர்வண்டிப் பாதைகள் மின்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்கள்& குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 

முதலீட்டை ஈர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு புதிய தளவாடக் கொள்கை, ரூ.5 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு தணிக்கை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

நேரடி வரிகளைப் பொறுத்தவரை வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இந்த ஆண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதேநேரத்தில் புதிய வருமானவரி விதிப்பு முறையின்படி வருமானவரி படிநிலைகளின் அளவு மூன்றிலிருந்து 6-ஆக அதிகரிக்கப் பட்டிருப்பதும், வருமானவரி விகிதங்கள் 5 முதல் 10% வரை குறைக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிப்பவை

தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்ற பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழர்களின் பண்டைய கலாச்சாரத்தை உலகம் அறிந்து கொள்ள வழிவகுக்கும். மத்திய அரசின் கடன்சுமை 4.50% குறைந்திருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாகும். அதேநேரத்தில் தனியார்மயமாக்கலுக்கான கதவுகள் அகலமாக திறக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

நிதி ஆயோக்கின் பரிந்துரையை ஏற்று அரசு மற்றும் பொதுத்துறை கூட்டு முயற்சியில் 2000 மருத்துவ மனைகள் அமைக்கப்படும் என்பது, அரசு வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியாகும். இது மட்டுமின்றி, மருத்துவக் கட்டணத்தை கணிசமாக உயர்த்துவதற்கு வழிவகுக்கும். உயர்கல்வித்துறையில் நேரடியாக அன்னிய முதலீட்டை அனுமதிப்பதையும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எல்.ஐ.சி. எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை பங்கு சந்தைகள் மூலம் தனியாருக்கு விற்கும் முடிவு மிகவும் ஆபத்தானது ஆகும். எல்.ஐ.சி. மூலம் மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் ஈவுத்தொகை கிடைத்து வருகிறது. பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டால் அந்தத் தொகை குறைந்து விடும்.

பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியாருக்கு விற்பனை செய்வது மத்திய அரசின் வரி இல்லாத வருவாயை குறைத்து விடும். இது நல்ல விஷயமல்ல. மிழ்நாட்டு நலன் சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொண்டால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பாசனத் திட்டங்களை செயல்படுத்த போதுமான அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்த காலநிலை மாற்ற நெருக்கடி நிலை அறிவிக்கப்படாததும் வருத்தமளிக்கிறது. நிதிமசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முன்வர வேண்டும்.”  

வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன்:

பாஜக அரசின் “நிதிநிலை அறிக்கை” அதளபாதாளத்தில் சரிந்துகிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் கொண்டிருக்கவில்லை. வெற்றுச் சவடால்களைக் கொண்ட அலுப்பூட்டும் அலங்கார உரையாகவே இந்த பட்ஜெட் உரை அமைந்திருக்கிறது. வார்த்தை ஜாலங்களை வைத்தே மக்களை ஏமாற்றலாம் என மோடி அரசு நம்புகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இந்தியாவின் ‘ஜிடிபி’ முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 2 % என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. இந்நிலையில், விவசாயத் துறையைக் காப்பாற்றுவதற்கென்று எந்தவொரு சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

விவசாயத்துறைக்கென 16 அம்சத் திட்டங்களில், சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் 20 இலட்சம் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என்பது தவிர, வேறு உருப்படியான எந்த அறிவிப்பும் அதிலில்லை. வழக்கம்போல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று வாக்குறுதி மட்டுமே இந்த ஆண்டும் அளிக்கப்பட்டிருக்கிறது. 

பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்ந்து தனியாருக்கு விற்று வரும் மோடி அரசு இந்த ஆண்டு எல்ஐசியின் பங்குகளையும் விற்கப் போவதாக அறிவித்திருக்கிறது. எல்ஐசியில் முதலீடு செய்திருக்கிற கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கும் என்பதுடன், அந்நிறுவனத்தில் பணியாற்றும் இலட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலமும் இப்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இந்த அறிவிப்பை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். 

மோடி அரசு கடந்த ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘வரிச்சலுகை’ வழங்கியது. அதனால் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் இந்த ஆண்டும் அதேபோல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு காட்டும் நன்றி- விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. 

வருமான வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்குக் குறைந்த அளவிலாவது கருணைகாட்டும்; சலுகை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, புதிதாக வரி செலுத்தும் முறையை அறிவித்திருக்கும் நிதியமைச்சர், ‘பழைய முறையும் தொடரும்,புதிய முறையும் இருக்கும், எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்.

புதிய முறைக்கு போனால் முன்பிருந்த வசதிகள் இருக்காது என்ற எச்சரிக்கையையும் அவர் தெரிவித்திருக்கிறார். கணக்கிட்டுப் பார்க்கும்போது பழைய முறையே நலம்பயக்கும் என்பதாகத் தெரிகிறது. எனவே, இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினரை நம்ப வைத்து ஏமாற்றுவதாக உள்ளது. எஸ்சி / எஸ்டி மக்களுக்கு பட்ஜெட்டில் முறைப்படி மக்கள்தொகை அடிப்படையில் ஒதுக்க வேண்டிய (எஸ்சிஎஸ்பி/ டி.எஸ்.பி) தொகையை மோடி அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது.

அத்துடன், எஸ்சி வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்குரிய ‘போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’புக்கான தொகையைக் கடந்த ஆண்டு சுமார் ரூ.3000 கோடி அளவுக்கு குறைத்தார்கள். இந்த ஆண்டாவது அதை ஈடுசெய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போன ஆண்டு ஒதுக்கியதைவிட ரூ.100 கோடி மட்டுமே அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல எஸ்சி /எஸ்டி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் கட்டுவதற்கும் மிகக் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மகளிர் மேம்பாட்டுத் துறையின்கீழ் அங்கன்வாடிகளுக்கு ஒதுக்கப்படும் தொகை கடந்த ஆண்டு ஒதுக்கிய தொகையில் சுமார் ரூ.200 கோடி செலவு செய்யாமல் திருப்பி எடுத்துக் கொண்டுவிட்டார்கள். இந்த ஆண்டு எவ்வளவு செலவு செய்வார்கள்; எவ்வளவு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இப்போது செய்யப்பட்டிருக்கும் உயர்வு வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே ஆகும்

கிராமப்புற ஏழை மக்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்’ கீழ் கடந்த ஆண்டு 60,000 கோடி ஒதுக்கப்பட்டது. கிராமத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்தால் தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும் என்று பொருளாதார வல்லுனர்களெல்லாம் கூறி வந்த நிலையில், இந்த திட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை விட ரூ.1500 கோடி மட்டுமே கூடுதலாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கிறார்கள்.

அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் ஊழியர் பணிகளில் சேர்வதற்கு தேசிய அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற புதிய அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. மாநில அரசு ஊழியர்களையும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்தித் தேர்வு செய்வது என்றால் அது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாகும். எனவே இதை தமிழக அரசு ஏற்கக்கூடாது. மொத்தத்தில் இது அடித்தட்டு மக்களுக்கு விரோதமானதும் இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போவதும் ஆகும்.”