ரஜினிகாந்த் எனும் கிழவன்! தேர்தல் பிரசாரத்தில் சீமான் காட்டம்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தனியே நின்று கமல்ஹாசனுக்குப் பின்னே வாக்குகள் வாங்கியவர் சீமான்.


ஆனாலும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் மீண்டும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளில் களம் இறங்கியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் கந்தசாமிக்கு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்திய சீமான், ரஜினிகாந்த்தை கிழவன் என்று மறைமுகமாக தாக்கியது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

சீமான் பேசிய போது, “தமிழ்ச் சமூகம் தாய்மொழியை தொலைத்துவிட்டு, தமிழும் ஆங்கிலமும் கலந்துபேசும் தமிங்கலர்களாக மாறிவிட்டது. 10 வருடமாக கத்திக்கொண்டிருக்கிறாயே. உன் பேச்சை கேட்கிறார்களே. பிறகு ஏன் உனக்கு அதிகமாக வாக்கு வரவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு வாக்குகள் வரவில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழர்கள்” என்று கூறினார்.

மேலும் அவர் மறைமுகமாக ரஜினியைத் தாக்கிப் பேசினார். “70 வயதில் ஒரு நடிகன் மார்கெட் இழந்துவிட்டால் அவனை முதல்வராக்குகிவோம் என்கிறார்கள். நடிப்பிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் ராணுவத்தில் சென்று பணியாற்றலாமே. அங்கு சென்று ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது போல என்று வசனமெல்லாம் பேச முடியாது. 60 வயது அப்பா கிழவன்.

ஆனால், 70 வயது நடிகன் தலைவர்” என்று விமர்சனம் செய்தார். இந்த இடைத்தேர்தலில் வேறு எந்தக் கட்சிகளும் போட்டியிடவில்லை என்பதால் மூன்றாம் இடம் கன்ஃபார்ம். வாக்குசதவிகிதம் கூடுமா என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.