உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தாலும் கூட ரஜினியின் வருகைக்கு பிறகு தான் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா களை கட்டியது.
அமித் ஷானா யார்ன்னு இப்போ தெரிஞ்சிருக்கும்! வெங்கய்யா நாயுடு மேடையை பரபரப்பாக்கிய ரஜினி!
வெங்கய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவராக இரண்டு ஆண்டுகள் முழுமை அடைந்திருக்கின்றன. இதனை முன்னிட்டு தனது அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார் வெங்கய்யா.
இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆனால் வழக்கம் போல் ரஜினியின் பேச்சு தான் வெங்கய்யா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவை பரபரப்பாக்கியது. வெங்கய்யா குறித்து ரஜினி பேசியிருந்தாலும் அமித் ஷா பற்றி ரஜினி பேசியது தான் ஹைலைட்.
நிகழ்ச்சியில் ரஜினி அமித் ஷா குறித்து பேசியதாவது:- மிஷன் காஷ்மீரை வெற்றிகரமாக முடித்துள்ள அமித் ஷாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு என்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசியதையும் குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் அருமையாக காஷ்மீர் குறித்து பேசினார். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது மிகவும் சரியான நடவடிக்கை.
தற்போது மக்களுக்கு அமித் ஷா என்றால் யார் என்று தெரியவந்திருக்கும். மோடி மற்றும் அமித் ஷா கூட்டணி கிருஷ்ணர் – அர்ஜூனன் கூட்டணி போன்றது. இதில் கிருஷ்ணர் யார்? அர்ஜூனர் யார் என்று நமக்கு தெரியாது.
இருவரில் கிருஷ்ணர் யார்? அர்ஜூனர் யார் என்று அவர்களுக்கு தான் தெரியும். மேலும் அமித் ஷா நலமோடு வாழ வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்கும் எனது வாழ்த்தை கூறிக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினி கூறினார்.
வெங்கய்யா நாயுடுவை புகழ்ந்து பேசிய ரஜினி தமிழில் பேசினார். ஆனால் அமித் ஷா குறித்து பேசிய போது ரஜினி ஆங்கிலத்தில் பேசினார். இதன் மூலம் ரஜினி தான் பேசுவது அமித் ஷாவுக்கு புரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.