ராஜேந்திர பாலாஜிக்கு வெட்கமோ வெட்கம்! கலக்குங்க அமைச்சரே!

விதவிதமாக கோட், சூட் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அசத்திக்கொண்டிருக்க, ஒரு தமிழன் போல அதே வேட்டி, சட்டையில் அமெரிக்காவை சுற்றுகிறார் ராஜேந்திர பாலாஜி. அவரது உடை வைரலாக பரவிவருகிறது.


தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு பிரிட்டன், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்குப் பயணமாகியுள்ளது. பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர், செப்.1-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றார்.

முதல்வருக்கு முன்பே நியூயார்க் சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு, நியூயார்க் நகரைச் சுற்றிப் பார்த்தது. இக்குழுவிலேயே வெள்ளை வேட்டி சட்டை, பாக்கெட்டில் ஜெயலலிதா படத்துடன் சுற்றியது ராஜேந்திர பாலாஜி மட்டும்தான். அமைச்சர்கள் குழுவுடன் சென்றுள்ள அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

"புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்துக்குச் சென்ற ராஜேந்திர பாலாஜியைத் தமிழர்கள் சிலர் அடையாளம் கண்டுகொண்டு, 'சார், உங்க வீடியோவை எல்லாம் யூடியூப்ல பார்ப்போம். பிரமாதமா பேசுறீங்க' என்று பாராட்டினார்கள். அதைக் கேட்டு, மனிதர் வெட்கத்தில் சிவந்துவிட்டார். ‘ஸ்டார் பக்ஸ்’ கடையில் காபி சாப்பிட அமைச்சர்கள் குழு ஒதுங்கியது.

ராஜேந்திர பாலாஜியை நெருங்கிய அமெரிக்க மாணவிகள் சிலர், அவர் அணிந்திருந்த வேட்டியைக் குறிப்பிட்டு, 'ஆர் யூ ஃப்ரம் இந்தியா? யூ ஆர் வியரிங் தோத்தி' எனக் கேட்க, 'யெஸ், ஐயாம் தமிழன்' எனக் கூறி தனது ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தார்.

அருகிலிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 'ஏம்பா, நாங்களும்தான் உன்கூடச் சுத்திகிட்டே இருக்குறோம். எங்கள யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே?' எனக் கிண்டலடித்தார். அதற்கு, 'என்னைய மாதிரி வேட்டிக் கட்டிகிட்டு வந்திருந்தா, நம்மாளுனு அடையாளம் தெரிஞ்சிருக்கும். உங்கள யாரு பேன்ட், சட்டை போடச் சொன்னது?' என ராஜேந்திர பாலாஜி கேட்க, ஏரியாவே கலகலப்பானது" என்கின்றனர் உடன் சென்ற அதிகாரிகள் சிலர்.

நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் செல்பவர்கள் குளிரில் நடுங்கிவிடுவார்கள். இதற்காகவே, கோட் சூட் அணிந்துசெல்வது வழக்கம். ஆனால், அங்கேயும் வெள்ளை வேட்டி, சட்டையுடன் அதகளப்படுத்தியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. பஃபல்லோ நகரிலுள்ள கால்நடைப் பண்ணையைப் பார்வையிடச் சென்றபோதும், தமிழர்கள் சிலர் இவர் வேட்டி அணிந்திருப்பதைப் பார்த்து பெருமிதத்துடன் வந்து நலம் விசாரித்துள்ளனர்.

`ராஜேந்திர பாலாஜிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து, மற்ற அமைச்சர்களுக்கும் வேட்டி சட்டை மீது ஆர்வம் வந்துவிட்டது. அடுத்தடுத்து வரும் சுற்றுப்பயணங்களில், வேட்டி சட்டை அணிந்துசெல்லவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்' என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தில்.

தமிழன்டா!