காஷ்மீர் நிலைமை கவலை அளிக்கிறது! அங்கு என்ன நடக்கிறது? பீதி கிளப்பும் ராகுல் காந்தி!

டெல்லியில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது காஷ்மீர் நிலவரம் சரியில்லை என்று கூறி அதிர வைத்தார்.


செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது: காஷ்மீரில் இருந்து வரக்கூடிய தகவல்கள் நல்லதாக இல்லை. காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் பணிகளுக்கு இடையே காஷ்மீரில் இருந்து தகவல்கள் சில வந்தன.

அதன்படி காஷ்மீர் நிலவரம் மிகவும் தவறாக சென்று கொண்டிருப்பது போல் தெரிகிறது. வன்முறைகள் அங்கு நிகழ்வதாக தகவல்கள் வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் மக்கள் உயிரிழப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்வு விவகாரத்தை சிறிது ஒத்திவைத்துவிட்டு காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி விவாதித்தோம். எனவே இந்த சமயத்தில் இந்திய அரசு மற்றும் பிரதமர் காஷ்மீரில் மிகச்சரியாக என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாகவும் உண்மையாகவும் தெரிவிக்க வேண்டும்.

காஷ்மீரில் இருந்து வரக்கூடிய தகவல்கள் எங்களை கவலை அடையச் செய்கின்றன. எனவே தான் நாட்டுக்கு மிகவும் வெளிப்படையாகவும் உண்மையாகவும் அங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இதனிடையே காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறுவதாகவும் வன்முறைகள் நிகழ்வதாகவும் வெளியான தகவல் தவறு என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.