மாரிதாஸ்க்கு சிக்கல் ஆரம்பம்.. இவரை காப்பாற்றுவதற்கு பா.ஜ.க.வும் குருமூர்த்தியும் களம் இறங்குவார்களா..?

ஒரு ஒயிட் போர்டு வைத்து, பேராசிரியர் போன்று அவ்வப்போது சில செய்திகளைப் போட்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இயங்குபவர் மாரிதாஸ். மீடியாக்களும், பத்திரிகைகளும் தி.மு.க.வின் பிடிக்குள் இருக்கிறது என்று, அதனை நிரூப்பிப்பதற்கு வீடியோ வெளியிடுவேன் என்று சொல்லி, அப்படியே வெளியிடவும் செய்தார்.


அந்த வீடியோவுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்ட நேரத்தில், குருமூர்த்தி போன்ற பா.ஜ.க. ஆதரவாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பும் இருந்தது. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் என்று தி.மு.க. வட்டாரம் கொந்தளித்தது.

இந்த நிலையில் மாரிதாஸ் மீது வழக்கு போடுவதற்கு தயாராகிவிட்டது நியூஸ் 18 நிறுவனம். அவதூறு பரப்புவது, போர்ஜரியாக கடிதம் தயாரித்து வெளியிட்டது, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மத மிரட்டல் விடுப்பது, நல்லிணக்கத்தை குலைத்து சமூகத்தில் மோதலை உருவாக்குவது, இந்துகளை பிற மதத்தினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது, நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் மாரிதாஸ் மீது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் சட்ட ரீதியிலான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறதாம். ஆக, மாரிதாஸ்க்கு சிக்கல் ஆரம்பம். இவரை காப்பாற்றுவதற்கு பா.ஜ.க.வும் குருமூர்த்தியும் களம் இறங்குவார்களா என்பதுதான் கேள்வி.