அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருகிறது..! எச்சரிக்கை விடும் பாப்புலர் ஃப்ரண்ட்

பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பை தொடர்ந்து அனைத்து குடிமக்களும் அமைப்புகளும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சமூக கட்டமைப்பை பல வழிகளிலும் சிதைத்து, தசாப்தங்களை கடந்த இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரும் நாட்களில் தேசம் எதிர்பார்க்கிறது. 1992-ல் வெளிப்படையான காழ்ப்புணர்ச்சியால் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக குடியரசு ஆகிய நமது தேசத்தின் அடிப்படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.  

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்களை அச்சுறுத்தும் முயற்சிகள் வகுப்புவாத சக்திகளால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்றம் அளிக்க இருக்கின்ற தீர்ப்பில் இந்த விவகாரத்திற்கு அமைதியான நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் அனைவரும் இணைந்து வாழும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு புதிய சகாப்தம் உருவாகும் என்றும் தேசம் நம்பிக்கை கொண்டுள்ளது.

நீதிக்காக உறுதியாக நிற்கும் அதேசமயம் சட்டம் மற்றும் நீதித் துறையின் புனிதத்தை பாதுகாப்பது அனைத்து தரப்பினர் மீதான பொறுப்பாகும். சாதகமான அல்லது பாதகமான தீர்ப்பைத் தொடர்ந்து அதிகபட்ச சந்தோஷம் அல்லது கோபத்தை வெளிப்படுத்துவதில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் தேசியத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.