ஒட்டு மொத்த மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்த மூன்றரை அடி உயர பிரமிதா! என்ன செய்தார் தெரியுமா?

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த பிரமிதா அகஸ்டின், பல தடைகளை கடந்து வழக்கறிஞர் பட்டம் வென்று சாதித்துள்ளார்.


28 வயதாகும் பிரமிதா, 3.5 அடி உயரமே உள்ளவர். குட்டையாக இருப்பதால் பலரும் இவரை கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள். இதனாலேயே, பள்ளி செல்வதை வெறுத்த பிரமிதா, பின்னர் கொச்சியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி, கான்வென்டில் சேர்ந்து படிக்க ஆரம்பித்துள்ளார். 

உயரம் குறைவு என்பது மட்டுமின்றி, பிறவியிலேயே, பிரமிதாவுக்கு எலும்புகள் பலவீனமாக இருப்பதால், அவரால் எந்த கடினமான வேலையும் செய்ய முடியாது. விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், வயது அதிகரிக்க, அதிகரிக்க, ஒரு கட்டத்தில், வழக்கறிஞரக்கு படிக்க தீர்மானித்தார்.

இதற்காக, நிதி நெருக்கடி முதல் பலவித இடையூறுகளை அவர் சந்தித்திருக்கிறார். குறிப்பாக, அவரது தந்தைக்கு இதய நோயும், தாய்க்கு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டிருக்கிறது. வறுமை குடும்பம் என்றாலும், பிரமிதாவின் கனவு நிறைவேற, அவரது பெற்றோர், சகோதரர்கள், சகோதரி என அனைவரும் பக்கபலமாக நின்றுள்ளனர். 

பலத்த முயற்சியுடன் வழக்கறிஞராக படிக்க தொடங்கியவருக்கு கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பேரிடியாக இறங்கியுள்ளது. ஆம். அவர்களின் ஒரே வீடு வெள்ளத்தில் நாசமாகிவிட்டது. இதையடுத்து, உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன், தற்போது தனிக் கொட்டகை ஒன்றில்தான் பிரமிதா குடும்பம் வசித்து வருகிறது.

இருந்தாலும், வழக்கறிஞர் பட்டம் வெல்லும் கனவை விடாமல் தொடர்ந்து போராடியவர், தற்போது கனவை நிறைவேற்றியுள்ளார். கடந்த ஜூன் 16ம் தேதியன்று, பிரமிதாவின் பெயர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சேர்க்கப்பட்டுள்ளது. இனி அவரும் வழக்கு விசாரணைகளில் ஆஜராகலாம்.

எர்ணாகுளத்தில் உள்ள நார்த் குதியதோடு என்ற சிறு கிராமத்தில் பிறந்து, எர்ணாக்குளம் அரசு சட்ட கல்லூரியில் பட்டம் வென்று, தற்போது கேரள உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உருவெடுத்துள்ள இந்த 3.5 அடி பெண், பல்வேறு தரப்பினருக்கும் ஒரு ஊக்க சக்தியாக உள்ளார் என்றால் அது மிகையல்ல.