பொள்ளாச்சி பெண்கள் வழக்கு..! திருநாவுக்கரசு, சபரி மீதான வழக்கு ரத்து..! காரணம் போலீஸ்? அதிர வைக்கும் தகவல்!

பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


முகநூலில் அறிமுகம் ஆகும் பெண்களை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்வது, பின்னர் அதை வீடியோவாக பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டுவது என போன்ற சம்பவங்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை அடுத்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிவந்தது.  

இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டனர். இதில் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து கொங்கு மண்டலமே பரபரப்பானது.

பொள்ளாச்சி அருகே உள்ள திருநாவுக்கரசுவின் பழைய வீட்டில்தான் கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய நிலையில் மார்ச் மாதம் வழக்கில் தொடர்புடைய மணிவண்ணன் என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் இந்த வழக்கு ஏப்ரல் மாதத்தில் சிபிஐ கைக்கு மாறியது. பாலில் கொடூர வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் குண்டர் சட்ட உத்தரவு தொடர்பாக உரிய ஆவணங்களை உறவினர்களுக்கு முறையாக வழங்கவில்லை எனக் கூறி, திருநாவுக்கரசு, சபரிராஜன் இருவரையும் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவித்தனர்.