அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடுக்குப் பிறகு, அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடு கொடுத்த எடப்பாடி அரசு. ராமதாஸ் பாராட்டு.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில், அடுத்து ஒரு அதிரடியாக மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


தமிழகத்திலுள்ள 19 வகையான உயர் சிறப்பு படிப்புகளில் 334 இடங்கள் உள்ளன. 2017ஆம் ஆண்டு வரை இந்த இடங்களை தமிழக அரசே நிரப்பிவந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கு அதில் 50 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசின் கைகளுக்குச் சென்றதால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், உயர் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதில் உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டுப் பலன் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

உள் ஒதுக்கீட்டுக்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதை மேற்கோள் காட்டி அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்புப் படிப்புகளில் 50 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்தது. இதை நேற்று தமிழக அரசு தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தொடர்ந்து 50% இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், “உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது. எனவே உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்; முட்டுக்கட்டை போடக்கூடாது” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.