இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80 ஆக உயரப் போகுது! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சவூதி அரேபியா நாட்டில் உள்ள சவூதி ஆரம்கோவுக்குச் சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால், அந்த சுத்திகரிப்பு நிலையம் முழுக்க சேதமடைந்துள்ளது.

இது ஒட்டுமொத்த சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் தயாரிப்பில் சரிபாதி அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்நாட்டின் தினசரி கச்சா எண்ணெய் தயாரிப்பில் 57 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளது.

இதன்காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரே நாளில், பேரலுக்கு 67 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நாளில் இருந்ததைவிட 12 சதவீத உயர்வாகும்.   

இதேபோல, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 71 டாலர்களாக உயர்வடைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 20 சதவீத உயர்வாகும். இதன் எதிரொலியாக, இந்தியா உள்பட உலக நாடுகளின் பங்குச்சந்தை வர்த்தகம் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாட்களில் மிகவும் சரிவை சந்தித்துள்ளன.  

இதுதவிர, ஆரம்கோவின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஓரிரு நாட்களில் திடீரென இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல, சமையல் எரிவாயு உள்ளிட்ட பிற அத்தியாவசிய எரிபொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரிக்கக்கூடும் என்பதால், மக்களிடையே புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.