விகடன் குழுமத்தில் நான்கு பத்திரிகை நிறுத்துவதற்கு இத்தனை பேர் பொங்குறீங்களே? ஏம்ப்பா கடையில மட்டும் போய் வாங்க மாட்டேங்கிறீங்க?

விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் டாக்டர் விகடன், தடம், மணமகள், சுட்டி விகடன் ஆகிய பத்திரிகைகள் இந்த இதழுடன் நிறுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலரும் இப்போது ஆவேசமாக குரல் எழுப்புகிறார்கள்.


குறிப்பாக தடம் பத்திரிகைக்கு எழுத்தாளர்களும், சமூகப் போராளிகளும் பொங்கிப்பொங்கி எழுதுகிறார்கள். ஆனால், தங்கள் வாழ்நாளில் இவர்கள் ஒரு புத்தகம் கூட வாங்கியிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. இப்போது தி.மு.க.வை சேர்ந்த மனுஷ்யபுத்திரன் தடம் பத்திரிகைக்காக பொங்கி ஒரு பதிவு போட்டிருக்கிறார். இதோ, அந்தப் பதிவு.  

யாராவது ஒரு எழுத்தாளன் செத்துவிட்டால் அந்த நாள் மட்டும் அவனுக்காக மனம் பொங்கி பதிவுகள் எழுதுவது போன்றதுதான் ஒரு இலக்கிய இதழ் சாகும்போது அதற்காக வருந்தி வருந்தி எழுதுவதும். இப்படி ஒரு நாள் துக்கம் கேட்பதோடு நம் இலக்கியப் பொறுப்புகள் நிறைவடைந்துவிட்டதா?

விகடன் போன்ற பெரு நிறுவங்களின் கதை வேறு. ஆனால் இன்று பெரும்பாலான சிற்றிதழ் மற்றும் இடைநிலை இதழ்களும் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

ஜி.எஸ்.டிக்குப்பிறகு காகித விலை, அச்சுக்கூலி கடுமையாக உயர்ந்துவிட்டது. பத்திரிகைகளை காசு கொடுத்து வாங்கும் பழக்கம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாதாமாதம் தொடர்ச்சியாக வெளிவரும் இதழ்களின் நெருக்கடிகள் பயங்கரமானவை. மனமுவந்து விளம்பர உதவிகள் செய்து வந்த சிலரும்கூட அவர்களது சொந்த நெருக்கடிகள் காரணமாக அவற்றை குறைத்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு இதழை காப்பாற்றக்கூடிய ஓரளவு வசதிபடைத்தவர்கள் உதவினால் பல இதழ்கள் காப்பாற்றப்படும். குறைந்த பட்சம் ஒரு இலக்கிய இதழுக்கு ஐந்தாயிரம் சந்தா இருந்தால்கூட போதும். ஆனால் என்ன நடக்கிறது?

உயிர்மைக்கு மாதா மாதம் நாற்பதாயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதை எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை. பிற வேலைகள் செய்தே அந்த இழப்பை சரி செய்ய போராடுகிறேன்.

வாசகர்கள் – புரவலர்கள் ஆதரவு கேட்டு ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். வெகு சிலரே அதற்கு தங்கள் பங்களிப்பை செலுத்தினார்கள். ஆனால் ஒரு இலக்கிய இதழ் நிறுத்தபடும்போது கேட்கும் ஒப்பாரிகளுக்கு பஞ்சமே இல்லை.

எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கிலேயே எழுதிக்கொள்ளலாம், படித்துக்கொள்ளலாம் என்ற மனநிலை எழுத்தாளர்களிடம் மட்டுமல்ல, வாசகர்களிடமும் வளர்ந்து வருகிறது.

இது மாயை. ஒரு அச்சு இதழில் நிகழும் இலக்கிய- அறிவுசார்ந்த இயக்கத்திற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இலக்கிய- கருத்தியல் சார்ந்த இதழ்கள் ஏற்படுத்திய தாக்கத்தை தனி நபர் சார்ந்த முக நூல் பதிவுகள் ஒருபோதும் ஏற்படுத்தாது.

90களில் நிறப்பிரிகை, சுபமங்களா, நிகழ் போன்ற வெவேறு தளங்களில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பெரியது. தொடர்ச்சியாக உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீரா நதி போன்ற இதழ்கள் ஒரு இலக்கிய- கருத்தியல் சூழலை உயிர்ப்போடு வைத்திருப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

தடமும் அந்த வரிசையில் சேர்கிறது. முரண்பாடுகள், போதாமைகளின் வழியாக இந்த இதழ்கள் அவசியமில்லை என யாராவது சொன்னால் அவர் இந்தச் சூழலோடு தொடர்பற்றவர் என்று பொருள்.

இமையத்தின்’’ பெத்தவன்’ கதை உயிர்மை இதழில்தான் வெளிவந்தது. அந்தக் கதையை அதன் அளவு கருதி பல பத்திரிகைகள் திரும்பக் கொடுத்ததை இமையமே என்னிடம் சொன்னார். உயிர்மை அதை வெளியிட்டபோது ஏற்படுத்திய தாக்கம் அளப்பெரிது. இது இலக்கிய இதழ்களின் வழியாகவே சாத்தியம்.

உயிர்மை வெளியிட்ட பல சிறப்பிதழிகள் அந்தபொருள்ன் குறித்து ஆழமான பார்வைகளை உருவாக்கியிருக்கின்றன. இதெல்லாம் இதுபோன்ற இதழ்கள் வழியாகவே சாத்தியம்

சிற்றிதழ்கள் வழியாக கவனமாக படிக்கக கூடிய ஒரு வாசகப்பரப்பு உருவாக்கப்;படுகிறது. இந்த வாசகப்பரப்பை நீங்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக ஒரு போது உருவாக்கமுடியாது. எல்லா ஊடகங்களிலும் செயல்படுபவன் என்ற முறையில் இதை அழுத்திக்கூறுகிறேன்.

இந்த வாசகப்பரப்பிற்காககவே எழுத்தாளன் இலவசமாக எழுதுகிறான். இலக்கியப்பத்திரிகை நடத்துகிறவன் வட்டிக்கு வாங்கி நஷ்டத்தில் நடத்துகிறான். இது ஒரு கலாச்சார செயல்பாடு.

அவசியமான பத்திரிகைகள் அழிந்துபோவது மணிக்கொடி காலம்தொட்டு இந்தத் துயரம் தொடர்கிறது. ஒரு ஆள் பலியானதும் புதிதாக பலியாக இன்னொரு ஆள் உள்ளே வருவான்.

தெஹல்கா இதழ் அன்றைய பா.ஜ.க அரசால் முடக்கபட்டபோது நாடு முழுக்க இருந்து அதை உயிர்ப்பிக்க நன்கொடைகள் குவிந்தன. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நல்ல பத்திரிகையை காப்பாற்ற ஒரு துரும்பையேனும் கிள்ளிபோட எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்?

இலக்கியம் என்பது ஒரு தரித்திரமாக இன்னும் எவ்வளவு காலம் தமிழகத்தில் இருக்கபோகிறது?

இதையும் கிண்டலடிக்க சில பேர் வருவார்கள். ஒரு இலக்கியவாதியோ இலக்கியப்பத்திரிகையோ சாகும்வரை ஏன் காத்திருக்கிறீர்கள்? அதற்குமுன் நீங்கள் செய்ய ஒன்றுமே இல்லையா?