கொடூர வில்லனாக இயல்பாக பொருத்திப் போகிறார் பாண்டே! வைரலாகும் NKP விமர்சனம்!

ரொம்ப அபூர்வமாகத் தான் எந்த ஒரு திரைப்படம் பற்றியும் பொது வெளியில் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகும்! அப்படியான படம் தான் நேர்கொண்ட பார்வை!


பத்திரிகையாளராக தன் பயணத்தை தொடங்கிய வினோத் முதல் படமான சதுரங்க வேட்டையிலேயே தமிழ் சமூகத்தை அதிர சிந்திக்க வைத்தார். 

இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படம் தான் என்றாலும் தமிழ் ரசிகர்கள் இந்த பெண்கள் குறித்த புதுமை பார்வையை ஏற்றுக் கொள்வார்களா? என்று யாராயிருந்தாலும் பயப்படவே செய்வார்கள். அந்த வகையில் இந்த முயற்சிக்கே தலை வணங்குகிறேன்.

பெண்கள் குறித்த ஆணாதிக்க சிந்தனையிலிருந்து இன்னும் கூட நவீன இளைஞர்கள் மாற முடியாத, அல்லது தங்கள் செளகரியத்திற்காக மாற்றிக் கொள்ள விரும்பாத போலித் தனத்தை போட்டு உடைக்கிறது இத் திரைப்படம்!

பெண்கள் நெருங்கி பழகும் அளவுக்கு, தனி இடத்தில் தங்களோடு நம்பி உறவாடும் அளவுக்கு பெரும்பாலான ஆண்கள் இன்னும் தங்களை தகுதிபடுத்திக் கொள்ளவில்லை என்பது தான் இந்த படம் உணர்த்தும் செய்தியாகும்...!  இந்த செய்தியை அஜித் குமாரைக் கொண்டு சொன்னது தான் மிகவும் சிறப்பாகும்.

இயக்குனர் வினோத்திடம் நான் முதல் படத்திலிருந்து பார்க்கும் சிறப்புகளில் ஒன்று -  மனிதர்களின் இயல்புகளை உள்வாங்கி அவர்களுக்கு ஏற்ப கதாபாத்திரங்களைக் கொடுப்பதில் ஒரு நிபுணர். இந்த அபூர்வ ஆற்றல் காரணமாகவே அவர் படத்தில் யாரும் நடிப்பது போலவே நமக்குத் தெரியாது! தங்கள் இயல்புப் படி வாழ்ந்து பேசிச் செல்வதாகவே தோன்றும்! 

இந்த படத்திலும் பாத்திரங்களூக்கு ஏற்ப மிகத் துல்லியமாக அவர் நடிகை, நடிகர்களை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் கொடுரவழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு அவர் தேர்ந்தெடுத்துள்ள ரங்கராஜ்பாண்டே, பொருந்திப் போகிறார். இந்த மோசமான வில்லன் கதாபாத்திரத்திற்கு பிரகாஷ்ராஜை போட்டிருந்தால் நூறு சதவிகித அர்ப்பணிப்போடு மிகவும் மெனக்கெட்டு,ஜொலித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், எந்த மெனக்கெடலும் இல்லாமல் பொருந்தி போகும் ஒருவரை கண்டறிந்த விதத்தில் தான், நான் இயக்குனரின் ஆற்றலை வியந்து பார்க்கிறேன். இன்றைய இளம் தலைமுறைக்கு இது படம் மட்டுமல்ல, பாடம்!

நன்றி: சாவித்திரி கண்ணன்.