பல்லுடன் பிறக்கும் குழந்தைகள் - நல்ல நேரத்தில் சிசேரியன் செய்யலாமா - சியாமிஸ் இரட்டையர்கள்

அரிதாக ஒருசில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே பற்கள் இருப்பதுண்டு. பல்லுடன் பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று பெரியவர்கள் அச்சப்படுவதுண்டு. இது உண்மையா என்பதைப் பார்க்கலாம்.


 ·         2000 முதல் 3000 குழந்தைகளில் ஒன்று பிறக்கும்போது பல்லுடன் பிறக்கிறது. இதனை நாடல் டீத் என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள்.

·         இந்தக் குழந்தைகளுக்கு பொதுவாக கீழ் ஈறுகளில் பற்கள் முளைக்கிறது என்றாலும் வலுவான வேர் இருப்பதில்லை.

·         பால் குடிப்பதற்கு இந்தப் பற்கள் இடைஞ்சலாக இருப்பதாக தெரியவந்தால் மருத்துவர்களே இந்த பற்களை அகற்றிவிடுவார்கள்.

·         இந்தப் பற்கள் வலுவாக இருந்தால் முறைப்படி பராமரித்து வளர்க்கலாம். இதுகுறித்து பல் டாக்டர் இறுதி முடிவு எடுப்பார்.

எப்படியாயினும் முதல் ஆறு மாதங்களுக்கு பற்பசை இல்லாமல், குழந்தையின் பற்களை பராமரிப்பதே போதுமானது. பிறக்கும்போது பற்கள் இருப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் கிடையாது என்பதுதான் உண்மை.

 நல்ல நேரத்தில் சிசேரியன் செய்யலாமா?

நாள், நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து திருமணம் செய்வது போலவே, நல்ல நேரம் குறிப்பிட்டு சிசேரியன் செய்து குழந்தையை எடுக்கமுடியுமா என்று மருத்துவர்களிடம் கேட்பது அதிகரித்து வருகிறது. இது தவறான அணுகுமுறை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

·         அனைத்து மருத்துவர்களுமே இயற்கையாக பிரசவம் நடக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதனால் சிசேரியனுக்குத் தூண்டக்கூடாது.

·         கர்ப்பிணிக்கு அல்லது சிசுவிற்கு ஏதேனும் சிக்கல் ஏற்படும் என்ற சூழலில் மட்டுமே சிசேரியன் செய்வதற்கு முடிவு எடுக்கப்படும்.

·         சிக்கலை சரிசெய்ய மருத்துவர்கள் இயங்கும்போது, தள்ளிப்போடுமாறு அல்லது சீக்கிரம் குழந்தையை எடுக்கச்சொல்வது முறையல்ல.

·         நார்மல் டெலிவரி அல்லது சிசேரியன் என்ற முடிவை முழுமையாக மருத்துவர் கையில் நம்பிக்கையுடன் ஒப்படைக்க வேண்டும்.

அதனால் எந்தக் காரணம் கொண்டும் குறிப்பிட்ட நாள் அல்லது கிழமையில்தான் பிரசவம் நடைபெற வேண்டும் என்று ஆசைப்படுவது தாய் அல்லது குழந்தைக்கு நல்லதல்ல.

 சியாமிஸ் இரட்டையர்கள்


இன்று இரட்டைக் குழந்தைகள் பிறப்பு மிகவும் சாதாரணமாகிவிட்டது. அதிலும் செயற்கை முறை குழந்தைக்கு முயற்சிப்பவர்களிடையே இரட்டைக் குழந்தைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இரட்டைக் குழந்தைகளில் சியாமிஸ் இரட்டையர்கள் என்றால் ஆபத்து என அர்த்தம்.

·         இரண்டு குழந்தைகளும் தனித்தனியே பிறக்காமல், சில சமயங்களில் உடலின் ஏதேனும் ஒருசில பாகம் ஒட்டிக்கொண்டு இருக்கலாம்.

·         சினை முட்டை இரண்டாகப் பிரியும்போது முழுவதுமாக பிரியாமல் போவதால், இதுபோல் ஒட்டிக்கொண்டு குழந்தைகள் பிறக்கின்றன.

·         ஒட்டிப்பிறக்கும் சியாமிஸ் இரட்டையர்களுக்கு நெஞ்சோடு நெஞ்சு, அடிவயிற்றோடு அல்லது தலையில் ஒட்டியிருக்கலாம்.

·         சியாமிஸ் குழந்தைகள் பெரும்பாலும் இறந்தே பிறக்கின்றன அல்லது விரைவில் இறந்துவிடுகின்றன. மிகவும் அபூர்வமாகவே வளர்ச்சி நிலையை அடைகின்றன.

சியாமிஸ் குழந்தைகளை பிரித்தெடுப்பது மிகவும் சிக்கலான தொழில்நுட்ப சவாலாக இருக்கிறது. அதனால் முன்கூட்டியே ஸ்கேன் மூலம் இந்தக் குழந்தைகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பது நல்லது.