மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்! தமிழகத்தை பழி தீர்க்க மோடி பிளான்!

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்பது போல் தேனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் எம்.பி.யாக தேர்வு பெற்றிருக்கிறார். கடந்த முறை வெற்றிபெற்ற ஒரே ஒரு பொன்னார் மத்திய அமைச்சரானது போன்று, இப்போது ரவீந்திரநாத்தும் அமைச்சராகப் போகிறாராம்.


இதுகுறித்து முழுமையாகப் பார்க்கும் முன்பு அவர் எப்படி ஜெயித்தார் என்பதைப் பார்க்கலாம்.தேனி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி காலை தொடங்கி 24ம் தேதி அதிகாலை வரை நீடித்தது. காலை 8மணிக்கு துவங்க வேண்டிய வாக்குப்பதிவு தாமதமாக 8.20க்கு ஆரம்பமானது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மந்தமாக சென்று கொண்டிருந்ததால் ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது. மேலும் ஒரு சில வாக்குப்பெட்டியின் எண் மற்றும் வாக்கு இயந்திரத்தின் எண் மாறுபட்டதால் ஏற்பட்ட குளறுபடி, மாலையில் பெய்த இடி, மழையால் கணிப்பொறி பழுது ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டு இறுதி சுற்று அறிவிக்கப்பட்டது.

தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே  23 சுற்றுகள் வரை முன்னிலையில் இருந்தார். ரவீந்திரநாத் இறுதியாக 5,04,814 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று கருதப்பட்ட தங்கதமிழ்செல்வன் மொத்தமே 1,44,050 வாக்குகள் மட்டுமே பெற்றார். எப்படியும் ரவீந்திரநாத்தை ஜெயிக்க வைக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷனே தீவிரமாக வேலை செய்ததாக அ.ம.மு.க குற்றம் சாட்டியது.

எது, எப்படியோ ரவீந்திரநாத் ஜெயித்துவிட்டார். தமிழகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றால் இப்போதைக்கு ரவீந்திரநாத்துக்குத்தான் மந்திரி பதவி கொடுக்க வேண்டும். அடுத்து பா.ஜ.க. சார்பில் ஒருவரை மாநிலங்களவை எம்.பி. ஆக்கி, அவருக்கு தனிப் பொறுப்பும், ரவீந்திரநாத்துக்கு துணை அமைச்சரும் கொடுக்கப்பட இருக்கிறதாம். தன்னை பழிவாங்கிய தமிழகத்தை இப்படித்தான் மோடி பழி வாங்குவார் என்று சொல்கிறார்கள். மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் வந்தா, மாநில அமைச்சர்கள் எழுந்து நிற்கணுமோ... என்னமோ போங்கப்பா...