சீமானுக்கு ஆதரவாக ஒரே ஒரு குரல்! கோட்சேவை பாராட்டலாம், பிரபாகரனை பாராட்டக் கூடாதா?

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சீமான் பேசிய விவகாரத்தில் திருமாவளவன் தொடங்கி திருமுருகன் காந்தி வரையிலும் இந்த நேரத்தில் இப்படி பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.


 இந்த நேரத்தில் ஒரே ஒருவராக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மட்டும் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். இதோ அவரது அறிக்கை. சீமானின் பேச்சைக் கண்டனம் செய்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது.

ஆனால், அந்தப் பேச்சை வைத்துக் கொண்டு, அவர் மீது தேசத் துரோக வழக்குப் போட வேண்டும்; அவரைச் சிறையில் அடைக்க வேண்டும்; அவர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ச.க., காங்கிரசு கட்சியினரும், திராவிடவாதத்தை ஆதரிக்கும் தனிநபர் சிலரும் கோருவது அவர்களின் மன வன்மத்தையே காட்டுகிறது.

இராசீவ்காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது, அவர் ஈழத்திற்கு அனுப்பிய இந்தியப் படை, தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிராகத்தான் போர் நடத்தியது. ஆயிரக்கணக்கானத் தமிழர்களைக் கொன்றது; தமிழ்ப்பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டது. ஆயிரக்கணக்கான தமிழர்களைத் தடுப்புக் காவலில் வைத்தது.

சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை 2008 _ 2009இல் அன்றாடம் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்தபோது, இந்திய அரசு அப்போருக்கு எல்லா வகையிலும் துணை செய்தது. போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் 18 பேர் தீக்குளித்து மாண்டார்கள். போர் நிறுத்தம் கோரியவர்களை பல்லாயிரக்கணக்கில் சிறையில் அடைத்தனர். பலர் பொடாச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டனர். ஈழத்தமிழ்ப் பொது மக்கள் ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் போராட்டம், குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு மறுத்ததால், அதன் மீது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மக்கள் அனைவருக்கும் சினம் கொண்டனர்.

அந்தச் சினம் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் தொடரத்தான் செய்கிறது. அதற்காக 1991 மே 21-இல் நடந்த இராசீவ்காந்தி கொலையை - அந்தக் கொலையை யார் செய்திருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆயுதப் போராட்டங்களோ தலைவர்களையும் தனி நபர்களையும் கொலை செய்யும் தீவிரவாதச் செயல்களோ சரியான பாதை அல்ல என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு!

மேற்படி பேச்சுக்காக காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை ஏற்று, தமிழ்நாடு காவல்துறை சீமான் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது சரியல்ல. எந்த சமூகப் பிரிவுக்கும் எதிராக வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சை சீமான் பேசவில்லை. எனவே, இ.த.ச. 153ஏ பொருந்தாது. இப்பேச்சால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இ.த.ச. 504 பிரிவும் பொருந்தாது.

கடந்த சில நாட்களாக இச்சிக்கலை பூதமாகப் பெரிதுபடுத்தி தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க பா.ச.க.வினரும், காங்கிரசாரும் முனைகின்றனர். தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட வேண்டும்.

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றது சரி என்று கூறி, கோட்சேயை தலைவர் என்றும், ஈகி என்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. வடமாநில அரசுகளும் எடுக்கவில்லை. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களின் ஒளிப்படங்கள் “தியாகிகளாக” அமிர்தசரஸ் பொற்கோயிலில் பொறிக்கப் பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பா.ச.க.வினரும், காங்கிரசாரும் ஒரு தேர்தல் கூட்டத்தில் ஆவேசத்தில் பேசிய பேச்சுக்காக சீமானை சிறையில் தள்ள வேண்டுமென்றும், அவர் கட்சியை தடை செய்ய வேண்டுமென்றும் கூக்குரலிடுவது திட்டமிட்ட தமிழினத் துரோகச் செயலாகவே கருத வேண்டியுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்த வழக்கைக் கைவிடுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார் மணியரசன்.