கடும் குளிரில் பச்சிளம் பெண் குழந்தையை தூக்கி வீசிய தாய்! பிறகு நடந்த அற்புதம்!

கடும் குளிரில் பச்சிளம் குழந்தையை தாய் வீசிச் சென்ற நிலையில் சரியான நேரத்தில் அக்குழந்தையை கண்டுபிடித்த விவசாயிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார்.


   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தை உள்ளது. இன்று மாட்டுப் பொங்கல் என்பதால் அதிகாலையிலேயே உழவர் சந்தைக்கு விவசாயிகள் தங்கள் பொருட்களுடன் வர ஆரம்பித்தனர். இதே போல் காய்கறிகள் வாங்க பொதுமக்களும் அங்கு வரத் தொடங்கினர். உழவர் சந்தை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

   முதலில் சந்தைக்கு வந்த யாரோ ஒருவரின் குழந்தை அழுவதாக அங்கிருந்தவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் குழந்தையின் அழுகை நிற்காமல் நீடித்துக் கொண்டே சென்றுள்ளது. இதனால் அங்கிருந்த விவசாயிகள் குழந்தையின் அழுகை வரும் திசையை நோக்கி சென்றுள்ளனர். அப்போது உழவர் சந்தைக்கு பின்புறம் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

   இதனை அடுத்து விவசாயிகள் சிலர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது கடும் குளிரில் குழந்தை வெட வெட என நடுங்கிக் கொண்டே கதறிக் கொண்டிருந்தது. அருகாமையில் யாரும் இல்லாத நிலையில், குழந்தையின் பெற்றோர் யார் என விவசாயிகள் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தையை கேட்டு யாரும் வரவில்லை. மேலும் குழந்தை பசியில் துடித்துக் கொண்டிருந்தது.

  மேலும் ஓசூரில் கடும் குளிர் என்பதால் குழந்தைக்கு ஸ்வட்டர் கூட இல்லாமல் மிகவும் சோர்வாகியிருந்தது. உடனடியாக அங்கிருந்த சிலர் குழந்தைக்கு பால் கொடுத்தனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் சிறிது நேரம் தாமதமாக வந்திருந்தாலும் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என்று கூறியுள்ளனர்.

   அத்துடன் குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றி சரி செய்தனர். தற்போது குழந்தை நன்றாக உள்ளது. குழந்தையை கேட்டு யாரும் வராத நிலையில் அந்த குழந்தையை தாய் வீசிச் சென்றதாக கருதி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் பெற்ற குழந்தையை இரக்கம் இன்றி உறை பனியில் வீசிச் சென்ற அந்த கொடூர பெண்மணியையும் போலீசார் தேடி வருகின்றனர். விவசாயிகள் மட்டும் சரியான நேரத்தில் பார்க்கவில்லை என்றால் பச்சிளம் குழந்தையை நாம் காப்பாற்றியிருக்க முடியாது.

   எனவே குழந்தை காப்பாற்றப்பட்ட இந்த நிகழ்வு அதிசயமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் உழவர் சந்தையின் பின்புறம் மக்கள் நடமாட்டமே இருக்காது.