ஒரு எம்எல்ஏ ராஜினாமா! சட்டப்பேரவையில் திமுக பலம் குறைகிறது!

காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் சட்டப்பேரவையில் திமுக கூட்டணியின் பலம் குறைகிறது.


சட்டப்பேரவையில் தற்போது திமுகவிற்கு 101 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 9 எம்எல்ஏக்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏக்களும் என திமுக கூட்டணியின் எம்எல்ஏக்களின் ஆதரவு எண்ணிக்கை 111ஆக உள்ளது. கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பியாக வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் நான்குநேரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

ஒருவர் ஒரே நேரத்தில் எம்பி அல்லது எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும். அந்த வகையில் தனது நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வசந்தகுமார் முடிவெடுத்துள்ளார். நாளை சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாளை வசந்தகுமார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை எட்டாக குறையும். மேலும் திமுக கூட்டணியில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் 110 ஆக குறைந்து விடும். நாங்குநேரி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்.

இதனால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பலம் குறைந்து எடப்பாடி அரசுக்கும் சிக்கல் குறைந்துவிடும். அதேசமயம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு இடைத் தேர்தலில் திமுக வெற்றி கொடுக்குமா அல்லது திமுகவே வேட்பாளரை நிறுத்துமா என்பது போகப்போகத்தான் தெரியும்.