அதிவேகம்! கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து! 20 வயது ஹரிணிக்கு ஏற்பட்ட விபரீதம்!

தஞ்சாவூர் அடுத்த பேராவூரணியில் இருந்து கும்பகோணம் ஜெயங்கொண்டம் விருதாச்சலம் வழியாக செல்லும் பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஆம்னி பேருந்து சென்னையை நோக்கி சென்றுகொண்டிருந்தது.


இந்த பேருந்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனின் உறவினரான ஹரினி மற்றும் பயணிகள் செல்வி, மல்லிகா, உமாபாதி, ஹாசியா, இளங்கோவன் ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

ஆம்னிப்பேருந்து நள்ளிரவில் கடலூர் மாவட்டம் வடலூரில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதியதில் நிலைதடுமாறி பேருந்து கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் கலெக்டரின் உறவினரான வீரியன்கோட்டையை சேர்ந்த ஹரினி (20) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இவர் பொறியியல் படிப்பு படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.

பேருந்து விபத்தில் சிக்கிய பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் ராஜா மற்றும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் முதலில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஹரினியின் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சின்னா பின்னமான ஆம்னிப் பேருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா அல்லது தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக என வடலூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

பொதுவாகவே குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக சில ஓட்டுநர்கள் அதிவேகமாக ஆம்னிப் பேருந்துகளை ஓட்டுவதாக உள்ள குற்றச்சாட்டு காலம் காலமாக உள்ளது.