அதுக்கு பெண்களை ஆண்கள் வலியுறுத்த சட்டத்தில் இடம் இல்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

காதலிக்கும்படி, பெண்களை வலியுறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ஒருதலையாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், தனது காதலை ஏற்காததால், ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவே, இதன்பேரில், நீதிபதி என்.வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. முடிவாக, அந்த இளைஞருக்கு ஜாமீன் தர மறுத்த நீதிபதி, அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கும்படியும் அறிவுறுத்தினார். 

இதுதவிர, அவர் மேலும் கூறியதாவது: தன்னை காதலிக்கும்படி பெண்களை வலியுறுத்த ஆணுக்கு எந்த உரிமையும் இல்லை. பெண் என்பவர் தனது விருப்பங்களுக்கு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் எண்ணமே, இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகும். இதுதவிர, பெண்கள் மற்றவர்களுடன் பழகும் முறைகளும், அவரை திருமணம் செய்ய வேண்டும் என ஆண்களை தூண்டுகிறது. 

இருந்தாலும், ஆசை காரணமாக, பெண்களை கத்தியால் குத்தும் அளவுக்குச் செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற ஒருதலைக் காதல் வழக்குகளில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குற்றவாளிகளுக்கு அனுதாபம் காட்டுவதையும், ஜாமீன் வழங்குவதையும் நீதிமன்றங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு நீதிபதி என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.