கைலாசா நாட்டுக்குப் போகலாம் வர்றீங்களா..? அழைக்கிறார் நித்தியானந்தா

நடிகை ரஞ்சிதாவால் படுஃபேமஸான நித்தியானந்தா கைலாசா என்று தனக்கென்று நாட்டை உருவாக்கிக்கொண்டு, தனி ஆவர்த்தனம் செய்துவருகிறார். அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டும் யாராலும் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.


கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். மூன்று நாட்களுக்குமேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.

அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். கைலாசா வருகை தர விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது. இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உடனே அப்ளை செய்யுங்க மக்களே..