பொருளாதாரம் சூப்பரா இருக்குதாம்! யாரு சொன்னது? நம்ம நிர்மலா சீதாராமே சொல்லிட்டாங்க!

காஷ்மீர், முத்தலாக், அயோத்தி என்று எத்தனையோ சாதனைகளை மத்திய அரசு செய்துவந்தாலும், பொருளாதார பிரச்னைகளை ஒரு பெரிய விஷயமாக கருதுவது ஏன் என்று நிர்மலா சீதாராமன் இன்று கோபமாகக் கேட்டுள்ளார்.


மாநிலங்களவையில் நேற்று நிர்மலா சீதாராமன் பேசியபோதுதான் இந்த அரிய தத்துவத்தை வெளியிட்டார். ‘‘காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க. ஆட்சி அமைத்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ளது.

இதனால், ஏழை, எளிய மக்களும், நடுத்தர மக்களும் எவ்வித பிரச்னையுமின்றி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் முக்கியத் துறைகள் அனைத்தும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன என்று திருவாய் மலர்ந்து அரிய தகவல்களை கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில், ‘‘நமது நாட்டில் பணப்புழக்கம் சீராக உள்ளது. பொருளாதாரம் சுணங்குகிறது என்றால் முதலில் பணப்புழக்கம்தான் குறையும். ஆனால், அப்படி எந்த அறிகுறிகளும் தென்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.  

ஆக, நாடும் மக்களும் நன்றாக இருக்கிறார்கள் என்றால் ஏன் நிறுவனங்கள் ஆட்களை வேலையைவிட்டு தூக்குகிறார்கள், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து பணம் பார்க்கிறார்கள் என்பதை சொல்வாரா நிர்மலா சீதாராமன்.