வேலூரில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்! விளக்குகள் போல் மின்னியதை பார்த்த மக்கள் பீதி!

சந்திராயன் 2 - ஆர்பிட்டரில் இருந்து நிலவை தரையிறங்க முயன்ற விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்து தொப்பென்று நிலவில் விழுந்த செய்தி பரபரப்பு அடங்குவதற்குள் வேலூர் மாவட்டத்தில் வானத்தில் இருந்து மர்மபொருள் ஒன்று வேகமாக பூமியில் விழுந்ததால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர்.


அது ஒருவேலை விக்ரம் லேண்டராக இருக்குமோ என்ற தேவையற்ற சந்தேகம் நேயர்களாகிய உங்களுக்கு வேண்டாம். வேலூர் கவசம்பட்டு பகுதியில் நேற்றிரவு வானத்திலிருந்து ஒரு பொருள் வந்து திடீரென விழுந்ததாகவும், அதில் சில விளக்குகள் போல் மின்னியதை பார்த்து அங்குள்ள மக்கள் அலறி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தடவியல் துறைக்கு தகவல் சொல்ல, அவர்கள் விரைந்து வந்து அந்த பொருளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் நிச்சயமாக அது வெடிக்கும் பொருள் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.

அது வானிலை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பொருள் என்றும், வானிலை நிலவரத்தை துல்லியமாக கணிக்கக் கூடிய பொருள் என்றும் தெரிவித்த தடவியல் அறிஞர்கள் இந்த பொருள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எங்கிருந்து விழுந்தது என விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

மர்ம பொருள் எங்கிருந்து எப்படி வானத்திலிருந்து விழுந்தது? அல்லது டிரோன் கேமரா மூலம் கொண்டு செல்லப்பட்டு போடப்பட்டதாக என்பது குறித்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போது பார்த்தாலும், கொலை, கொள்ளை, வழிப்பறி கள்ளக்காதல் என்ற வழக்குகளையே பார்த்து வந்த போலீசாருக்கு விஞ்ஞான ரீதியா ஒரு வழக்கு வந்துள்ளது கொஞ்சம் ஆறுதல்தானே?