அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 இடங்களுக்கு சுற்றுலா! இந்திய மக்களுக்கு மோடி கொடுத்துள்ள சூப்பர் அசைன்மென்ட்!

டெல்லி: ''இந்தியர்கள் 2022ம் ஆண்டிற்குள் 15 இடங்களுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டும்'' என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றி வைத்த பின், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசினார்.  அப்போது அவர், ''இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள இடங்களுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்றுவருகிறார்கள். அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

2022ம் ஆண்டிற்குள், சுற்றுலா செல்ல விரும்பும் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு, 15 புதிய இடங்களை கண்டுபிடித்து, அங்கே சென்று வர வேண்டும். அந்த இடங்கள் இந்தியாவிற்குள் இருக்க வேண்டும். அங்கு நீங்கள் சென்று வர தொடங்கினால் அங்குள்ள அடிப்படை வசதிகள் மேம்படும். உள்ளூர் நிர்வாகம் அப்பகுதியின் சுற்றுலா, போக்குவரத்து, வர்த்தகத்தை மேம்படுத்த முன்வரும்.

இப்படி எல்லோரும் செய்ய தொடங்கினால் இந்தியா முழுக்க வளர்ச்சி ஏற்படும்,'' எனக் கூறினார். இதே விசயத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். 

இதற்குப் பலரும் பதில் அளித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த், இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாகவும், இதேபோல மற்ற இந்தியர்களும் முன்வர வேண்டும், இதுபற்றி இந்திய சுற்றுலாத் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். 

முன்னதாக, சுதந்திர தின உரையில், மக்கள் தொகை கட்டுப்பாடு, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், அனைவருக்கும் குடிநீர், முப்படைகளையும் ஒரே தலைமையின் கீழ் கொண்டுவருவது உள்ளிட்ட அறிவிப்புகளை மோடி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.