இராணிப்பேட்டை ஆட்சியரகத்துக்கு விடுதலைவீரர் ஜமதக்கனி பெயரிடுக!

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்துக்கு இந்த மாவட்டத்தில் பிறந்து சாகித்ய அகடமி விருதைப் பெற்ற விடுதலைப்போராட்ட வீரர் ஜமதக்னியின் பெயரைச் சூட்டுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.


பா.ம.க. நிறுவனர் இராமதாசு இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:  தமிழ்நாட்டில் விடுதலைக்காக போராடியவர்களில் சில தலைவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ள நிலையில், விடுதலைப் போரில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பலருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை ஆகும். அத்தகையவர்களில் மிக முக்கியமானவர் இராணிப்பேட்டை மாவட்டம் கடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த இரா.ஜமதக்கனி ஆவார்.

வாலாஜாப்பேட்டையை அடுத்த கடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் இரா. ஜமதக்கனி பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர். இளம்வயதில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கத் தொடங்கிய ஜமதக்கனி, தேச விடுதலைக்காக பலமுறை சிறைக்கு சென்றிருக்கிறார்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில், பாதிக்கும் மேற்பட்ட காலத்தை, அதாவது ஒன்பது ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்தை சிறையில் கழித்தவர். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அதிக காலம் சிறை தண்டனையை அனுபவித்த தலைவர் என்ற பெருமை பெற்றவர் என்பதிலிருந்தே இரா.ஜமதக்கனி அவர்களின் தன்னலமற்ற போக்கையும், தேச விடுதலைக்காக அவர் செய்த தியாகத்தையும் அறிய முடியும்.

போற்றத்தக்க அளவுக்கு பெருமைகளையும், தியாகங்களையும் கொண்ட ஜமதக்கனி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. அவரது தியாகங்களை போற்றும் வகையில் வேலூர் மாவட்டத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மாவட்டத்திற்காக புதிதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு இரா.ஜமதக்கனியின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை இராணிப்பேட்டை மாவட்ட மக்களிடம் எழுந்துள்ளது. இது மிகவும் நியாயமான கோரிக்கையாகும்.

பன்முகத்தன்மை கொண்ட பொதுவுடைமைவாதியான ஜமதக்கனி விடுதலைப் போராட்ட வீரர் என்பதைக் கடந்து பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர் ஆவார். கார்ல் மார்க்ஸ் அவர்கள் எழுதிய கேபிடல் என்ற நூலை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் ஜமதக்கனி அவர்கள் தான். இந்த நூலை தமிழக அரசே பதிப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் புலமை பெற்ற இவர் ‘காமயாயினி’ என்ற இந்தி நூலை ‘காமன் மகள்’ என்ற பெயரில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். திருமுருகாற்றுப்படை, கந்தர் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களுக்கு உரை எழுதிய பெருமையும் ஜமதக்கனி அவர்களுக்கு உண்டு.

ஜமத்கனியின் குடும்பப் பின்னணியும் தியாக வரலாறு நிறைந்தது தான். மகாத்மா காந்தி அவர்களால் தென்னாட்டு ஜான்சிராணி என்று போற்றப்பட்டவரும், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாள் தான் இவரது மாமியார் ஆவார்.

இவரது மனைவியும், கடலூர் அஞ்சலை அம்மாளின் மகளுமான அம்மாக்கண்ணு அவரது 9 வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலையான போது அஞ்சலை அம்மாள் சிறையில் இருந்ததால், அவரை காந்தியடிகளே அழைத்துச் சென்று அவரது ஆசிரமத்தில் வளர்த்த வரலாறு உண்டு.

விடுதலைப் போராட்ட வீரர் ஜமதக்கனியின் இத்தகைய பெருமைகளையும், சிறப்புகளையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், இன்று வரை அந்த கடமையை தமிழக ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை.

வேலூர் மாவட்டத்தைப் பிரித்து இராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு ஜமதக்கனியின் பெயரை சூட்ட அரசு முன்வர வேண்டும். அத்துடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஜமதக்கனியின் உருவச் சிலையையும் அரசு அமைக்கவேண்டும்” என்று இராமதாசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.