திடீரென இரண்டாக பிளந்த சாலை! பல அடி தூரத்திற்கு ஆழம்! நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

மும்பையில் தொடரும் கனமழையின் பெரும் பாதிப்புகளில் ஒன்றாக மும்பை - நாசிக் நெடுஞ்சாலை நெடுகிலும் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.


மகாராஷ்டிர மாநிலம் காசர்காட் என்ற இடத்தில் சாலை நெடுகிலும் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் தொடக்கத்தில் இது கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் உள்ள சாலை என கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில நெடுஞ்சாலை போலீசார் இது காசர் காட் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் திடீரென சாலை பிளந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனிடையே கர்நாடக மாநிலத்தில் இருந்து மும்பை கோலாப்பூர் ஷீரடி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா மற்றும் எல்லாப்பூர் வழித்தடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர் கனமழை காரணமாக ரயில் பாதைகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பல்வேறு மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாட்னா – வாஸ்கோடாகாமா, ஹூப்ளி – வாஸ்கோடாகாமா, வாஸ்கோடாகாமா – ஹவுரா, ஹஸ்ரத் நிஜாமுதீன் – வாஸ்கோடாகாமா, வாஸ்கோடகாமா - கே எஸ் ஆர் பெங்களூரு உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணா ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து உள்ள நிலையில் ராணுவம் தேசிய பேரிடர் மீட்பு படை மாநில பேரிடர் மீட்பு படை உள்ளிட்டோர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்