பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! காப்பாற்ற ரயில்வே பிளாட்பாரம் வரை சென்ற ஆட்டோ! ஆனால் அதிகாரிகள் செய்த மோசமான செயல்!

மும்பை: கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றுவற்காக ரயில்வே பிளாட்பார்மில் ஆட்டோ ஓட்டியவர் கைது செய்யப்பட்டார்.


கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற ரயில்வே பிளாட்பார்மில் ஆட்டோ ஓட்டியவர் கைது

மும்பையை அடுத்துள்ள விரார் பகுதியை சேர்ந்தவர் சாகர் கம்லக்கர் கவாட் (35 வயது). ஆட்டோ டிரைவராக பணிபுரியும் இவர், சென்ற ஞாயிறன்று கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, அவசர அவசரமாக ஆட்டோ ஓட்டிச் சென்றார். இதன்போது வழியில் குறுக்கிட்ட ரயில்வே பிளாட்பார்மில் ரயில்வே விதிகளை மீறி, ஆட்டோவை ஓட்டிச் சென்று பலரையும் திகைப்படைய செய்தார். 

அதாவது, அந்த பெண் ரயிலில் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், விரார் வந்தபோது, திடீரென வயிற்று வலி வந்துவிட்டதாம். சுற்றிலும் பலத்த மழை பெய்துகொண்டிருந்ததால் என்ன செய்வதென தெரியாமல் பெண்ணின் கணவர் குழப்பமடைந்தார்.

பிறகு, ரயில் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கவாட்டை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், அந்த பெண்ணால் பிளாட்பார்மில் நடந்துகூட வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவசரத்திற்கு உதவி செய்யும் நோக்கில் ரயில்வே விதிகளை மீறி, ரயில் நிலையத்திற்கு உள்ளேயே ஆட்டோவை ஓட்டிச் சென்று குறிப்பிட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு, மருத்துவமனையில் கவாட் சேர்ப்பித்தார். 

மனிதாபிமான அடிப்படையில் அவர் செய்த உதவி பலரிடையே அதிர்ச்சியையும், வியப்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஆனால், ரயில்வே விதிகளை மீறி பிளாட்பார்மில் ஆட்டோ ஓட்டியதற்காக, அவரை போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கவாட் ரயில் நிலையத்தின் உள்ளே ஆட்டோ ஓட்டிச் செல்லும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.