கணவனிடம் பணம் பறிக்க மகனை வைத்து தகாத செயல்! இளம் பெண்ணுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

தன்னை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த கணவனிடம் இருந்து பணம் பறிக்க பெற்ற மகனை போலியாக கடத்திய பெண் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.


கடந்த மாதம் 28-ஆம் தேதி சங்கீதா ஜக்தாப் என்ற பெண் பூனேவை அடுத்த ஹடாப்சர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் தான் கடைக்கு சென்று வந்த இடைவெளியில் கார் நிறுத்துமிடத்தில் விளையாடிக் கொண்டிருந்த தனது 4 வயது மகன் ஆர்யனை எவரோ கடத்தி விட்டதாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது ஸ்கார்ப்பியோ கார் ஒன்றில் மர்மநபர்கள் சிறுவனை கடத்திச் சென்றது தெரிய வந்தது. அந்தக் காரின் பதிவு எண்ணைக் கொண்டு ஆய்வு செய்த போது காரின் உரிமையாளரான சங்கீதா பரூட் என்பவர் சங்கீதா ஜக்தாபின்  தோழி எனத் தெரிய வந்தது

இதையடுத்து ஜக்தாபின் பக்கம் சந்தேகம் திரும்ப அவரிடமும், பரூட்டிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது ஜக்தாப், பரூட் மற்றும் மற்றும் நண்பரான அபிஜித் லாட் ஆகிய மூவரும் சேர்ந்து சிறுவனைக் கடத்தியது தெரியவந்தது. 

சங்கீதா ஜக்தாப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் கணவனுக்கு பிறந்த 19 வயதிலான மகனும், 16 வயதிலான மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் இறந்ததையடுத்து சங்கீதா ஷிர்டியைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள அவர்களுக்குப் பிறந்த மகன் தான் ஆர்யன்.

இந்நிலையில் கணவருடன் சங்கீதாவுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து கணவனை மிரட்டி 15 லட்சம் ரூபாயும், ஒரு ஃபிளாட்டும் பெறுவதற்காக கடத்தல் நாடகம் ஆடியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.