உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! பெற்ற தாயின் செயலால் நெல்லை பரபரப்பு!

திருநெல்வேலியில் சொந்த மகள் உயிருடன் இருந்த நிலையில் இறந்ததாக கூறி தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


 நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது 19 வயதான மகள் அபி சந்தோஷ் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இதனை கண்ட அபியின் கணவர் அதிர்ச்சி அடைந்து போஸ்டர் அச்சடித்த அச்சகத்திற்கு தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, அவரது தாய் அபி மஞ்சள் காமாலையில் இறந்துவிட்டதாக கூறி பணம் கொடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அச்சடிக்க சொன்னதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திசையன்விளை காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

பின் இரு தரப்பினரிடையும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அபியின் தந்தை பன்னீர்செல்வம் நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்து விட்டதாகவும், அதன் பின் மூன்று பெண் குழந்தைகளையும் கூலி வேலை செய்து அவரது தாய் அமராவதி படித்த வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல் பெண் குழந்தையை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்த நிலையில், இரண்டாவது பெண் குழந்தை கல்லூரியிலும் மூன்றாவது பெண் குழந்தை பள்ளியிலும் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் அபிராமிக்கு தனது எதிர் வீட்டு நபரான சந்தோஷ் உடன் காதல் ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அபிராமி காதலித்ததால் அவரது தாயார் அமராவதி ஆத்திரம் அடைந்து அவரை கண்டித்துள்ளார். பின் இரு தரப்பு குடும்பத்தினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட சந்தோஷ் தனது குடும்பத்தாருடன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார்.

இருப்பினும் அபிராமிக்கும் சந்தோஷிர்க்கும் இடையேயான காதல் உறவே நீடித்திருந்தது. தொடர்ந்து அமராவதி அபிராமியை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் சந்தோஷ் உடன் திருமணம் செய்து கொண்டார் அபி.

இதனால் ஆத்திரமடைந்த அவரது தாயார் தனது மகள் இறந்து விட்டதாக ஊராருக்கு தெரிவிக்க 100 கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை அடித்து ஊர் முழுவதும் ஒட்டியது தெரியவந்துள்ளது. மேலும் தனக்கும் தனது மகளுக்கும் இனி எந்த வித தொடர்பும் இல்லை என அபிராமி காவல் நிலையத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது