மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்திய அறிவாளி மோடி

அமைச்சர் மனோதங்கராஜ் அதிரடி


மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்திய அறிவாளியின் புது அவதாரம் தான் நரேந்திர மோடி என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டிருக்கும் கருத்து சமூகவலைதளத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

இந்திய பொருளாதாரத்தின் இரத்த ஓட்டம் எனப்படுவது ரொக்கப்பணம். இந்தியாவின் 86.9% ரொக்கப்பணம் நவம்பர் 8, 2016 அன்று இந்தியாவில் 3 நோக்கங்களுக்காக மதிப்பிழப்பு செய்யப்பட்டது.

1. புழக்கத்தில் இருந்த போலி ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது.

2. கணக்கில் வராத கருப்புப்பணத்தை ஒழிப்பது.

3. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பது.

வெகுசிலரிடம் மட்டுமே இருந்த கருப்பு பணத்தை கண்டறிந்து மீட்டெடுப்பதையும், இந்தியாவில் உள்ள 487 விமான நிலையம் மற்றும் 229 துறைமுகங்கள் வழியாக வரும் போதைப்பொருட்களை தடுப்பதையும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதையும் விட்டுவிட்டு, இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களையும் சந்தேகப்பட்டு பணமதிப்பிழப்பு என்னும் பேயை ஏவிவிட்டார் பிரதமர் மோடி.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்கள் மரணமடைந்தனர் - 15 கோடி இந்து தினக்கூலி பணியாளர்களின் வாழ்வாதாரம் பல வாரங்கள் முடக்கப்பட்டது - லட்சக்கணக்கான இந்துக்களின் தொழில்கள் வீழ்ச்சியடைந்தன - பல லட்சம் இந்துக்கள் உணவு இன்றி தவித்தனர் - 50 லட்சம் இந்து இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது - கோடிக்கணக்கான இந்துக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்துக்களை ஏமாற்ற 50 நாளில் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக நாடகமாடினார். இறுதியில் இந்திய பொருளாதாரத்தில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 2 முறை இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2016-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. 2023-ல் 2000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இவ்விரண்டு நிகழ்வுகளின் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட்ட நேரடி நட்டம் ₹2,52,36,00,00,000 [இருபத்தைய்யாயிரத்து, இருநூற்று முப்பத்தி ஆறு கோடி].

அது எப்படி:

பணமதிப்பிழப்பு : 1 நவம்பர் 8, 2016 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் மதிப்பு ரூ.17.7 லட்சம் கோடி. இதில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.15.41 லட்சம் கோடி. இது ஒட்டுமொத்த கரன்சியில் 86.9% ஆகும். மீதமுள்ள 100 ரூபாய் மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் மதிப்பு 2.33 லட்சம் கோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசால் அறிவிக்கப்படும் முன்னரே, 2016 நவம்பர் 6-ம் தேதியன்று பஞ்சாப் மாநில பாஜக நிர்வாகி சஞ்சீவ் கம்போஜ் புதிய 2000 ரூபாய் நோட்டின் படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பின்பு 2016, நவம்பர் 08, இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தார். அப்படி மதிப்பிழப்பு செய்யப்பட்ட மொத்த தொகை - ரூ.15.41 லட்சம் கோடி. மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின் வங்கிகளுக்கு திரும்பிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் - ரூ.15.31 லட்சம் கோடி [99.3%]. திரும்பி வராத நோட்டுகள் - ரூ.10,720 கோடி. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னெடுக்கும் போது, கிட்டத்தட்ட 20% தொகை, அதாவது 3 லட்சம் கோடி பணம் இந்திய மக்களிடம் கருப்புப்பணமாக இருப்பதாக மோடி அரசு சந்தேகித்தது. இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 3 லட்சம் கோடி தொகை வங்கிகளுக்கு திரும்பாது எனவும், அதன் மூலம் 3 லட்சம் கோடி கருப்பு பணம் ஒழிக்கப்படும் எனவும் தப்புக்கணக்கு போட்டு வைத்திருந்தது மோடி அரசு. ஆனால் வெறும் 0.7% பணம் மட்டுமே திரும்ப வரவில்லை.

இது மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி மட்டுமல்லாமல் மோடி அரசின் சந்தேகத்தினால் மக்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். மேலும், 2012-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி தரவுகளின்படி ஒரு 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு ₹2.50. ஒரு 1000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு ரூ.3.17. மதிப்பிழப்பு செய்யப்பட நவம்பர் 8, 2016 அன்று இந்தியாவில் 1650 கோடி எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகளும், 670 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரணமாக புதிதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படும். பணமதிப்பிழப்பால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டிருந்த காலாவதியாகாத 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களின் அச்சடிப்பு செலவு : ₹6248 கோடி இழப்பு. இது மிகவும் குறைந்தபட்ச கணக்கீட்டின் அடிப்படையிலான தொகை ஆகும்.

பணமதிப்பிழப்பு நேரத்தில் மக்கள் பணம் இன்றி சாப்பாட்டிற்காக திண்டாடுகையில், சுரங்க ஊழல் மன்னன் கர்நாடக பாஜக தலைவர் ஜனார்த்தனன் ரெட்டி 450 கோடி செலவில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதே போல பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தனது மகளின் திருமணத்திற்கு பல்லாயிரம் கோடி செலவழித்தார். குறிப்பாக வி.ஐ.பி. விருந்தினர்களை அழைத்து வர 50 விமானங்களை பயன்படுத்தினார்.

பணமதிப்பிழப்பு : 2 2016 பணமதிப்பிழப்பிற்கு பின் ரிசர்வ் வங்கி புதிதாக அச்சிட்டு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மே, 20, 2023-ல் அவை செல்லாதவை எனவும், செப்டம்பர் 30, 2023-ற்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஒட்டுமொத்தமாக அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ₹7.4 லட்சம் கோடி. மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை : 370 கோடி.

இந்த நோட்டுகளை அச்சடிக்க, தாள் ஒன்றிற்கு 2016-17 -ல் ₹3.54 வீதமும், 2017-18-ல் ₹4.18 வீதமும், 2018-19-ல் ₹3.53 வீதமும் செலவாகியுள்ளது. பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு 04.12.2023 அன்று பதிலளித்துள்ள மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி 2000 ரூபாய் அச்சடித்து விநியோகிக்க ₹17,688 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 2016 பணமதிப்பிழப்பின் போது நாடு முழுவதும் காணப்பட்ட 2,06,862 ஏடிஎம்-களில் 2000 ரூபாய் நோட்டுகளை புகுத்தும் வகையில் இயந்திரங்களில் அளவு திருத்தம் செய்யவும், மென்பொருளில் மாற்றம் செய்யவும் வங்கிகள் பலகோடி செலவு செய்தன. இப்படி 2 பணமதிப்பிழப்பின் போதும் இந்திய மக்களின் வரிப்பணம் பயனற்ற வகையில் ஊதாரித்தனமாக விரயம் செய்யப்பட்டது. 2016 நடவடிக்கையின் போது ரூ.₹6248 கோடியும், 2023 நடவடிக்கையின் போது ₹17,688 கோடியும் பண அச்சடிப்பின் மூலம் மட்டுமே வீணடிக்கப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பால் வங்கிகளுக்கு திரும்பி வராத தொகை 10,720 கோடி மட்டுமே.

இது சுண்டக்கா கால்பணம், சுமைக்கூலி முக்கால்பணம் என்பது போன்ற நடவடிக்கை. இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்தின் மீது பல்முனை தாக்குதல் தொடுக்கப்பட்டு பல லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது. பணமதிப்பிழப்பின் போது நிர்ணயிக்கப்பட்ட 3 நோக்கங்கள் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.