டைம்ஸ், இந்து, டெலிகிராஃப் பத்திரிக்கைகளுக்கு இனி விளம்பரம் கிடையாது! ஏன் தெரியுமா?

அரசுக்கு ஜால்ரா போட்டால் விளம்பரம் கொடுப்பதும், எதிர்த்து எழுதினால் விளம்பரத்தைக் கட் செய்வதும் காலம்காலமாக நடந்துவரும் நிகழ்வு. இந்த அரசு விளம்பரங்களை நம்பியே எத்தனையோ பத்திரிகைகள் உயிருடன் இருக்கின்றன.


அந்த வகையில் மோடி அரசாங்கமும் ஜால்ராக்களுக்கு மட்டும் விளம்பரம் கொடுத்து, மற்றவர்களை தள்ளிவைக்க முடிவெடுத்துவிட்டது. முன்னதாக ரஃபேல் போர் விமானங்கள் குறித்த உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டதற்காக மார்ச் மாதம் முதலே தி ஹிந்துவுக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அதுபோல தி டைம்ஸ் குழுமத்துக்கும் ஜூன் மாதம் முதல் அரசு விளம்பரங்கள் நிறுத்தப் பட்டுள்ளதாம். 

இந்தக் குழுமங்களின் டி.வி. சேனல்களான டைம்ஸ் நவ், மிரர் நவ் ஆகியவையும், தேர்தல் நேரத்தின் போது, காங்கிரஸ் சார்பாக பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க.., புகார் கூறியிருந்தது.பத்திரிகை விளம்பர உலக கணக்கின் படி, டைம்ஸ் குழுமம் மாதத்துக்கு ரூ.15 கோடி அளவிலான அரசு விளம்பரத்தை பெற்று வந்தது. தி ஹிந்து குழுமம் மாதம் தோறும் ரூ.4 கோடி அளவிலான அரசு விளம்பரங்களைப் பெற்று வந்தது.

இந்த விவகாரத்தில் இரு ஊடகக் குழுமங்களும் அமைதியாக இருந்த போதும், இது குறித்து புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இது ஊடக சுதந்திரத்தை நசுக்குவதாக அவர் மோடி அரசு மீது குற்றம் சாட்டினார். அரசு விளம்பரங்களை வெளியிடும் டிஏவிபி மீது அவர் குற்றம் சாட்டினார்.

"நேரடியாக மக்களை தொடர்பு கொள்ளக்கூடிய அரசுக்கு, இந்தப் பத்திரிகைகள் இல்லாமல் வேறு பல ஊடகங்கள் மக்கள் தொடர்பில் இருக்கும்போது, எதற்காக அரசின் திட்டங்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் கொண்டு சேர்ப்பதற்காக அரசின் பணம் செலவழிக்கப் பட வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகின்றனர் பாஜக., ஆதரவாளர்கள். 

திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்யும் இவர்களுக்கான விளம்பரங்களை நிறுத்துவது வரவேற்கத்தக்கதே என்று கருத்து தெரிவிக்கின்றனர் பாஜக.,வினர். மேலும், தமிழகத்திலும் இது போன்று அச்சு, காட்சி ஊடகங்களைப் பட்டியலிட்டு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதனால் எல்லோரும் ஜால்ரா போடுங்கப்பா, இல்லைன்னா விளம்பரம் கட் ஆயிடும்.