ட்விட்டரை விட்டுப் போகாதீங்க மோடி..! வலைதளங்களில் இருந்து மோடி வெளியே போவதற்கு இதுதான் காரணமாம்!

அவ்வப்போது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தன்னுடைய சாதனைகளை வெளியிட்டு, உலகிலேயே அதிகம் ஃபாலோயர்களை வைத்திருப்பவர் நமது பிரதமர் நரேந்திரமோடி. அவர்தான் திடீரென ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.


அதாவது, ‘வரும் ஞாயிறன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யு ட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறி விடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் இதைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

இதை பார்த்தவுடன் சந்தோஷப்பட வேண்டிய ராகுல் காந்தி, ‘நீங்கள் சமூக வலைதள கணக்குகளை கைவிட வேண்டாம்; வெறுப்பைக் கைவிடுங்கள்’ என்று வழக்கம்போல் கேலி செய்து ட்வீட் செய்திருக்கிறார்.

இப்போது சமூக வலைதளங்களில், மோடி வெளியேற வேண்டுமா அல்லது நீடிக்க வேண்டுமா என்பதுதான் பட்டிமன்றம் போல் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் திடீரென மோடி இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட என்ன அவசியம் என்று டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம்.

டெல்லி கலவரம் மோடியின் மீதிருந்த இமேஜை உலக அளவில் ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டது. கிட்டத்தட்ட 75 நாடுகளில் இருந்து ஏகப்பட்ட விமர்சனங்கள் மோடியின் கணக்கில் விமர்சன மழை பொழிந்துவிட்டன.

கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் இழப்பும், 50 பேர் வரை மரணம் அடையவும் காரணமாகிவிட்ட டெல்லி கலவரத்தை முன்கூட்டியே கணிக்கவும் இல்லை, சரிவர கையாளவும் இல்லை என்று புகார் மழை பொழிவதை ஜீரணிக்க முடியாமல்தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம்.

இதுகுறித்து அமித் ஷாவிடமும் பேசவில்லையாம் மோடி. இந்த அறிவிப்பைக் கண்டு அவருக்கு எதிர்ப்புநிலை நெட்டிஷன்கள்தான் கவலைப்படுகிறார்கள். நீங்கள் போயிட்டா, நாங்க யாரைத்தான் கலாய்ப்போம் என்று ஒப்பாடி வைக்கிறார்கள்.

இதில் இருந்து வெளியேறிவிட்டால், மக்களின் உண்மையான மனநிலையை அறியாமலே போய்விடலாம் என்பதால் மோடி இருக்கவேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.