'கோமியத்தை குடிக்கச் சொல்வோருக்கு மோடி அறிவுரை - மக்களவையில் திருமா வேண்டுகோள்!

மக்களவையில் இன்று 'ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன சட்டவரைவு' மீதான விவாதத்தில் வி.சி.கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். அப்போது,” இந்தியாவில் பசுமாட்டுக் கோமியத்தைக் குடித்தால் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்கும் என ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள் மூடநம்பிக்கையான கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.


பிரதமர் மோடி அப்படிப்பட்ட சக்திகளுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். அவையில் திருமா பேசியதாவது : ” உலகளாவிய அளவில் மனித குலத்துக்கு இந்திய தேசம் வழங்கியிருக்கிற ஒரு மகத்தான அருட்கொடைதான் ஆயுர்வேத மருத்துவம்.

அத்தகைய பாரம்பரியம் வாய்ந்த மருத்துவத்தை மென்மேலும் வலுப்படுத்துவதற்கு குஜராத்தில் பல நிறுவனங்களை ஒருங்கிணைத்து முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மசோதாவை நான் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆயுர்வேதத்தைப் போல சித்த மருத்துவமும் பாரம்பரியமான ஒரு மருத்துவம். எப்படி கேரளாவில் ஆயுர்வேத மருத்துவம் உலகப்புகழ் பெற்றதாக விளங்குகிறதோ, அப்படி தமிழகத்தில் சித்த மருத்துவம் உலகப்புகழ் பெற்ற ஒருசிறந்த மருத்துவம். ஆகவே தான், சென்னை தாம்பரம் சானிட்டோரியம் என்கிற இடத்தில் அயோத்திதாச பண்டிதர் பெயரில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது கண்டுகொள்ளப்படாத நிலையில் வளர்ச்சி அடையாமல் தேங்கிக்கிடக்கிறது.

எனவே, மத்திய அரசு அந்த நிறுவனத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக, சித்த மருத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு அதனை நாடு தழுவிய நிலையில் வளர்த்தெடுப்பதற்கு முன்வரவேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் சித்த மருத்துவத்தையும் வளப்படுத்த வேண்டும்.

ஆயுர்வேத மருத்துவத்திற்காக குஜராத்தில் எப்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தை அமைக்க முயற்சி எடுத்திருக்கிறீர்களோ, அதுபோல் ஆயுர்வேதத்திற்கு மிகவும் சிறப்பிடமாக விளங்குகிற கேரளாவில் குறிப்பாக திருவனந்தபுரத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் ஒன்றை நிறுவ வேண்டும்.

தற்போது கொரோனா பற்றி நாடு முழுவதும், உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. இந்தியாவில் இன்றைக்கு அதற்கு மருத்துவம் சொல்கிறோம் என்கிற பெயரால் பசுமாட்டுக் கோமியத்தை குடித்தால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள் தவறான மூடநம்பிக்கையான கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் பணிவான வேண்டுகோள் இன்று இரவு 8 மணிக்கு நம்முடைய பிரதமர் அவர்கள் அதுகுறித்து நீண்ட நெடிய உரையை ஆற்ற இருப்பதாக தெரியவருகிறது. அப்படிப்பட்ட சக்திகளுக்கு பாடம் புகட்டக்கூடிய வகையில் அறிவுரை சொல்ல வேண்டும்.” என்று திருமா பேசினார்.