மாயமான கல்லூரி மாணவியின் தலைமுடி! எலும்புக் கூடு! காதலன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட திக் திக் சம்பவம்!

திருப்பூர்: காணாமல் போன காதலியின் எலும்பு மற்றும் தலைமுடி உள்ளிட்டவை அவரது காதலன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசி. இவர், தனது தங்கை முத்தரசியை காணவில்லை எனக் கூறி, கடந்த ஜூன் 5ம் தேதி போலீசில் புகார் அளித்தார். 19 வயதான முத்தரசியை தேடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், சரக்கு லாரி டிரைவராக வேலை செய்து வந்த பரத் என்ற நபரை பள்ளிக்கூடம் படித்த காலத்தில் இருந்தே முத்தரசி காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது  சகோதரி தமிழரசி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

சந்தேகத்தின் பேரில் பரத்தை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத்திற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்திருக்கிறார்கள். இதுபற்றி கேள்விப்பட்டதும் பரத் வீட்டிற்கு, கடந்த மே மாதம் 15ம் தேதி நேரில் முத்தரசி சென்றிருக்கிறார்.

தன்னை காதலித்துவிட்டு எப்படி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யலாம் எனக் கேட்டு அவர் வாக்குவாதத்தில் ஈடுபடவே, வேறு வழியின்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, முத்தரசியை பரத் அடித்துக் கொன்றுவிட்டார். பிறகு அவரது சடலத்தை, தனது வீட்டின் பின்பகுதியில் புதைத்துள்ளார்.

ஆனால், முத்தரசியின் நினைவு அவரை அடிக்கடி பாடாய்படுத்த, வேறு வழியின்றி ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அந்த நபர் புதைக்கப்பட்ட முத்தரசியின் உடலை எடுத்து, தீ வைத்துக் கொளுத்தும்படி ஐடியா சொல்லியுள்ளார். பரத்தும் அதைச் செய்துவிட்டு, முத்தரசியின் தலைமுடி, எலும்பு மற்றும் சாம்பல் ஆகியவற்றை எடுத்து பத்திரப்படுத்தியிருக்கிறார். 

தற்போது போலீசாரிடம் இந்த விவகாரத்தை தெரிவித்து பரத் உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டார். உடனடியாக, அவரை கைது செய்த போலீசார், பரத்தின் வீட்டில் இருந்து, முத்தரசியின் எலும்பு, தலைமுடி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.