பொய் பரப்பும் ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு நிச்சயம்… அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மைத் துறை முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் சந்தேகம் எழுப்பிய திமுக தலைவர் ஸ்டாலின், கோடிக்கணக்கான ரூபாயை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தைப் பெற்ற பிறகே மறைவுச் செய்தி அறிவிக்கப்பட்டதாக பொய்யாக கூறி வருகிறார்.


இந்த விவகாரத்தில் ஸ்டாலின் மீது கடுமையாக அறிக்கை வெளியிட்டுள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “அதிமுக ஆட்சியில் எந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அமைச்சரின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கைகள் வெளியிட்டு, மலிவான அரசியலை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

3.10.2020 முதல் அவருக்கு, உரிய உயர் சிகிச்சைகள், காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் குழுவினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. நானும், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரும், காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினருடன் இணைந்து பணியாற்றிட அமைக்கப்பட்ட, சென்னை அரசு இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் ஒரு சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவும், துரைக்கண்ணுவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். 

பல்வேறு உயர்தர தொடர் சிகிச்சைகள் மருத்துவ வல்லுனர் குழுவினரால் பல்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்காமல் 31.10.2020 அன்று இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார்.

கடவுளுக்கு நிகராக பணி செய்கின்ற நமது மருத்துவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் அறிக்கை அமைந்துள்ளது. காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் சிகிச்சை பெற்றார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்தபோதிலும், மாண்புமிகு அமைச்சர் அவர்களின் இறப்பிலும் அரசியல் லாபம் தேடும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்நாடு பெற்றுள்ளது நமக்கெல்லாம் துரதிருஷ்டம். அவருடைய இந்த செயல் கண்டிக்கத்தக்கது.மறைந்த அமைச்சரின் இறப்பின்மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றும் தெரிவித்துள்ளார் விஜயபாஸ்கர்.

ஸ்டாலினுக்கு சிக்கல்தான்.