பா.ஜ.க.வில் சேர்கிறாரா அமைச்சர் பாண்டியராஜன்..?

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்று சொன்னாலும், ஆட்டுவிப்பது என்னவோ பா.ஜ.க.தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த சமாசாரம். அதனால் ஒருசில அமைச்சர்கள் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ, நேரடியாக பா.ஜ.க.வின் ஜால்ராவாக இருக்கிறார்கள்.


அவர்களில் முதல் இடம் பிடிப்பவர் அமைச்சர் பாண்டியராஜன். ஏற்கெனவே குடியுருமை திருத்த சட்டம் தொடங்கி தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற அனைத்து விஷயங்களும் தமிழர்களின் நன்மைக்காகவே என்று முழங்கி வருபவர். 

சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்க நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து அவர் பேசுவதுதான், மிகப்பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பது சமஸ்கிருதம்தான், அதனால் அந்த மொழியில்தான் குடமுழுக்க நடத்த வேண்டும் என்று ஓங்கி குரல் எழுப்புகிறர்.

ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்றால், கோயிலுக்குள் செல்லமுடியாத மக்களைத் தடுத்த சண்டாளர் முறையும், அவர் சமூகத்து பெண்கள் ஜாக்கெட் போட முடியாத நிலையும்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. அதையும் இப்போதும் கடைபிடிக்கலாமே என்று கேட்கிறார்கள்.

இப்படியெல்லாம் ஜால்ரா போடுவதற்குப் பதில் நேரடியாகவே அவர் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடலாம் பாண்டியராஜன். அவருக்கு கட்சி மாறுவது என்ன புதுசா?