அடேங்கப்பா, அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரோஷம் வந்திடுச்சு..!

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றி மாற்றி தன்னுடைய கருத்துக்களை கூறிவருகிறது. கவர்னர் முடிவெடுப்பார் என்றும் ஒருசில நேரங்களில் மத்திய அரசின் முடிவு என்றும் விடுதலையை தாமதப்படுத்தி வருகிறது.


சமீபத்தில் நீதிமன்றத்தில் பேசிய மத்திய அரசின் வழக்கறிஞர், ‘‘ஏழுபேர் விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்கும் வரை தமிழக அரசின் கடிதத்துக்கு மதிப்பு பூஜ்ஜியம்தான்’’ என்று கடுமையான வாதத்தை முன்வைத்தது. இதுகுறித்து விழுப்புரத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

‘‘மத்திய அரசின் வழக்கறிஞர் இப்படியொரு கருத்தை அவர் தெரிந்தே சொன்னாரா என்று தெரியவில்லை. மத்திய அரசின் கீழ் வரும் குற்றங்களுக்கு மத்திய அரசினுடைய அனுமதியைப்பெற வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் கருணை மனு ஆளுநரிடம் இருக்கும் போது அது தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தமிழகத்தினுடைய முடிவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதில், ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். இதில் மத்திய அரசை கேட்க வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்க முழு உரிமை ஆளுநருக்கு உள்ளது. அப்படியிருக்கும்போது மத்திய அரசின் வழக்கறிஞர் வேண்டுமென்றே தேவையற்ற, தகுதியற்ற குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். இது கண்டனத்திற்குரியது. மாநில அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது. மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறோம். ஆளுநர் இந்த காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என எந்த காலக்கெடுவும் கிடையாது. அதனால் நல்ல முடிவாக எடுப்பார் என தமிழக அரசு நம்புகிறது. மத்திய அரசு வழக்குரைஞர் சொன்ன வார்த்தை கண்டனத்துக்கு உரியது’’ என்று டென்ஷன் ஆகியிருக்கிறார்.

ஒருத்தருக்காவது ரோஷம் வந்திச்சே...