கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய எடப்பாடி! நெகிழும் விவசாயிகள்! நாளை மேட்டூர் அணை திறப்பு!

இன்று காலை தி.மு.க. எம்.பி.பழனி மாணிக்கம் தலைமையில் ஒரு தீர்மானம் போட்டார்கள்.


அதாவது, மேட்டூர் அணையை இப்போது திறக்கக்கூடாது. 100 அடியைத் தாண்டிய பிறகு நிதானமாகத் திறந்தால் போதும் என்றார்கள். அது தெரிந்ததும், நாளையே திறக்க உத்தரவு போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இன்று மேட்டூர் நீர் திறப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் காவேரி டெல்டா பகுதி நெற்களஞ்சியமாக விளங்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை நீர்ப்பாசனம்.  மேட்டூர் அணையை வழக்கமாக திறக்கும் நாளான ஜுன் 12ம் தேதி அன்று போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் பாசனத்திற்காக நீர் திறக்க இயலாத நிலை ஏற்பட்டது.

 காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து, தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கிவிட்டதாலும், நீர்வரத்தும் விநாடிக்கு 2.40 லட்சம் கன அடியாக இருப்பதாலும், அணையின் நீர் இருப்பு 62 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது.

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது என்பதையும், காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடக நீர்த் தேக்கங்களிலிருந்து கிடைக்கக் கூடிய நீரினை எதிர்நோக்கியும், விவசாயிகளின் நீர்த் தேவையினையும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி காவேரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

மேலும், நானே 13.8.2019 அன்று நேரில் சென்று மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளேன். இதன் மூலம், காவேரி மற்றும் காவேரி படுகையில் உள்ள ஏறக்குறைய 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு, அதன் வாயிலாக பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் உயர்வடைந்து, குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்த இயலும். 

வேளாண் பெருமக்கள் நீரினை அனைத்து கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பாசனத்திற்கு பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தண்ணியை திறந்துவிடுறது சரி, கடைக்கோடி வரை போய் சேருதான்னு பார்த்துக்கோங்க.

முன்னதாக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எடப்பாடியை சந்தித்து வலியுறுத்தினர். அப்போது நீர்மட்டம் 90 அடியை எட்டும் போது அணை திறக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படி இன்று அணையை திறக்க உத்தரவிட்டு தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் எடப்பாடி.