ஒரே ஒரு நபர்! 3 கவர்ன்மென்ட் வேலை! 30 ஆண்டுகளாக 3 வேலைகளுக்கும் சம்பளம்! மாநில அரசையே அதிர வைத்த நபர்!

கிஷன்காஞ்ச்: ஒரே நேரத்தில் 3 இடத்தில் பணிபுரிந்த அரசு ஊழியர் சிக்கியுள்ளார்.


பீகாரைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம். இவர், கடந்த 30 ஆண்டுகளாக, ஒரே நேரத்தில், 3 விதமான அரசுப் பணிகளைச் செய்து வந்துள்ளார். சமீபத்தில் பீகார் மாநில நிதித்துறை அமைச்சகம், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மையப்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, அம்மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பிட்ட நபர், முறையான ஆவணங்களுடன் வரச் சொல்லி அறிவுறுத்தல் வந்தாலும், அவர் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை மட்டும் கொடுத்திருக்கிறார். மற்ற ஆவணங்களை கேட்டபோது, தராமல் தலைமறைவாகிவிட்டாராம். அவர் கொடுத்த ஆதார் மற்றும் பான் கார்டை வைத்து ஆய்வு செய்தபோது, ஒரே பெயர், ஒரே பிறந்த தேதி கொண்ட நபர், பீகார் அரசின் வெவ்வேறு அலுவலகங்களில் 3 விதமான வேலைகளைச் செய்வதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இதை வைத்து ஆய்வு செய்ததில், அந்த நபர் கட்டிட கட்டுமானத் துறை, நீர்வளத்துறை உள்ளிட்டவற்றில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்ததாக, தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய மோசடியை யாருக்கும் தெரியாமல் செய்து, கடந்த 30 ஆண்டுகளாக, அவர் பீகார் மாநில அரசின் சம்பளம் பெற்று வந்திருக்கிறார்.

இதுபற்றி தெரியவந்ததும், உடனடியாக, அந்த நபர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, பணிநீக்கம் செய்து, கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, பீகார் மாநில அரசின் துணைச் செயலாளர் சந்திரசேகர் பிரசாத் சிங் உத்தரவிட்டுள்ளார். படித்து விட்டு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அதிகம் நிறைந்த இந்தியாவில் ஒரே நபர் 3 வேலைகளைச் செய்து, அதற்காக அரசாங்க சம்பளமும் பெற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.