மாடுகளுக்கு பதில் பெண்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழும் விநோதம்! அதிர வைக்கும் காரணம்!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில், மழை வேண்டி, கிராம பெண்கள் பலரும் ஒன்று சேர்ந்து, ஏர்ப் பூட்டி உழுத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் கடும் வறட்சி காணப்படுவதால். பல இடங்களில் மக்கள் குடிக்கவும் தண்ணீர்  இன்றி அல்லாடி வருகின்றனர். இதையொட்டி மக்கள் பலவித சடங்குகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். தமிழகம் போன்ற பகுதிகளில் மழை வேண்டி,ஆளூம் அரசே  யாகம் நடத்தியது. இதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களே ஏர்ப்பூட்டி கலப்பையை பிடித்து உழும் நூதன பிரார்த்தனை நடைபெற்றது.

தற்போது, காரிப் சாகுபடி (சம்பா சாகுபடி) தொடங்கியுள்ளது. ஆனால், தேவையான நீர்ப்பாசனம் கிடைக்கபெறாமல் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பல இடங்களில் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். பருவமழையை எதிர்பார்த்து சாகுபடி பணிகளை பலர் ஒத்திவைத்துள்ளனர். 

இந்நிலையில், கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் மழை பொழிய வேண்டி, மக்கள் விநோதமான முறையில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆம். எருதுகள் பூட்டப்படும் ஏர் கலப்பையில் பெண்களை பிணைத்து, தோள்களில் இழுத்து ஏர் உழுகின்றனர்.

இதனை பலரும் தன்னார்வத்துடன் செய்கின்றனர். இப்படி பெண்களே கலப்பை பிடித்து உழுவதால், நல்ல மழை பெய்யும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.