அவளை காதலிப்பியா? கல்லூரிக்குள் வெட்டி பொலி போடப்பட்ட மாணவன்! பதற வைக்கும் காரணம்!

சென்னை: காதல் தகராறில் கல்லூரி மாணவன் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கம் தனியார் கல்லூரியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த ஷெவன்குமார் (20 வயது) இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று (ஜூன் 26) கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் வெளியே வந்த ஷெவன்குமாரை, 3 மாணவர்கள் வழிமறித்து சராமரியாக தாக்கியுள்ளனர்.

அதனைச் சிலர் தடுக்க முயன்றபோது, அவர்கள் தள்ளிவிட்டு, ஷெவன்குமாரை சுற்றி வளைத்து அடித்துள்ளனர். அத்துடன், ''அவளை காதலிக்காதே என்று சொல்லியும் நீ கேட்கவில்லை. எனவே, இருப்பதைவிட சாவதே மேல்,'' என்று கூறி கத்தியால் அவரை குத்திவிட்டு, அவர்கள் தப்பியோடிவிட்டனர். 

கல்லூரியின் முன்பு நடந்த இச்சம்பவத்தால் செய்வதறியாது திகைத்த சக மாணவர்கள் பின்னர், ஷெவன்குமாரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதன்பேரில், துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, சண்முகம் என்பவரை பிடித்து விசாரித்த போலீசாருக்கு, சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, ஆந்திராவைச் சேர்ந்த ஷெவன்குமாரை, சண்முகத்தின் உறவினர் மகள் காதலித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம், நண்பர்கள் உதவியுடன், ஷெவன்குமாரை கொன்றதாக, போலீசில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து வரும் இத்தகைய குற்ற செயல்கள், அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளன.