ஒ.பி.எஸ்.க்கும் ஈ.பி.எஸ்.க்கும் ஒரு திறந்த மடல்! ரத்தத்தின் ரத்தம் சொல்றதை கேளுங்க பாஸ்

கோவையைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் அ.தி.மு.க. வெல்ல வேண்டும் என்றால், என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது குறித்து ஒரு மனம் திறந்த மடல் எழுதியிருக்கிறார். இதோ அந்த மடல்.


ஒருவரே பல பதவிகளை வகிப்பதை தடை செய்ய வேண்டும். ஏதாவதொரு பதவியில் ஒருவரே தொடர்ந்து ஒட்டி கொண்டிருப்பதையும் நிறுத்த வேண்டும். ஆட்சியில் பதவி வகிக்கும் நபருக்கு கட்சியில் பதவி வழங்க கூடாது. குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் மட்டும் பதவி பெற்று தரும் முறையை கை விட வேண்டும். 

வாரிசு அரசியலை எந்த விதத்திலும் எந்த மட்டத்திலும் ஊக்குவிக்க கூடாது. ஒரு நபர் ஒரு பதவி என்ற முறையை நிறுவி அதிகார பரவலை ஊக்குவிக்க வேண்டும். தனி மனித துதிகளை நிறுத்திட வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜாதிகளை சேர்தவர்ககளே கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க கூடாது.

கட்சி பதவிகளில் குறைந்தது 33 சதவீதம் மகளிர்க்கு ஒதுக்கிட வேண்டும். பணத்திற்கு கட்சி பதவியை விற்கும் நபர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். கட்சியில் சேர்ந்து குறைந்தது 5 வருடங்கள் தொடர்ந்து உறுப்பினராக நிறைவு செய்த நபர்களுக்கே பதவி வழங்க வேண்டும். உள்ளாட்சி/சட்ட மன்ற/பாராளு மன்ற தேர்தல்களில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

கட்சி வளர்ச்சிக்கு நேர்மையாக பங்களிப்பவர்களையும் கட்சியின் குறிக்கோள்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களையும் அடையாளம் காண ஒரு தனி குழு அமைத்திட வேண்டும். கட்சியை பணம் காய்ச்சி மரமாக நினைத்து முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்தகைய நபர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும். செயல் திறன் அடிப்படையில் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஓர் ஆய்வு முறையை ஏற்படுத்த வேண்டும். ஆக்க பூர்வ சேவைகள் செய்த கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு ராஜ்ய சபா பதவிகளை கொடுத்து அவர்களை கவுரவிக்க வேண்டும். 

அவர்கள் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியின் செயல்பாடுகளிலும் கட்சி நிர்வாகிகள் எடுக்கும் முடிவுகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கட்சியை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாமாக முன் வந்து கொண்டு வர வேண்டும். தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனே களைய ஓர் ஏற்பாடு வேண்டும்.

ரௌடியைகளையும் குற்ற பின்னணி கொண்ட நபர்களையும் கட்சியில் நிச்சயம் உறுப்பினராக சேர்க்க கூடாது. நீண்ட காலமாக அமைச்சர்களாக பதவி வகித்தவர்களை கட்சி பதவிக்கு அனுப்பிவிட்டு, தகுதியும் திறமையும் உள்ள, இதுவரை அமைச்சர் பதவி வகிக்காத சட்ட மன்ற உறுப்பினர்களை அமைச்சர்களாக்க வேண்டும். அரசியல் ஆளுமையை வளர்த்திட முறையான தலைமை பண்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

கட்சியின் சார்பாக இயங்கும் தொலைக்காட்சி மற்றும் செய்திதாள் ஆகியவை, கட்சியின் பெரியரில்தான் பதிவு செய்து இருக்க வேண்டும். செய்தி தொடர்பாளர்களுக்கு முறையான பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். ஆட்சி பதவி வகிப்பவர்கள் தன்னடக்கத்துடனும் கனிவுடனும் செயல் பட வேண்டும்.

செய்வீர்களா... செய்வீர்களா என்று கேள்வி எழுப்புகிறார்.