பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வழிபட்ட மகன்! விபத்தில் உயிரிழந்ததால் அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட பரிதாபம்! திருச்சி சோகம்!

திருச்சியில் வக்கீல் மற்றும் மகன் இருவரும் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் ராஜராஜ சோழன். இவருக்கு 12 வயதில் சேரலாதன் என்ற மகன் இருக்கிறார்.  இருவரும்  23ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் திருவெறும்பூர் அடுத்த பெல் கணேசாரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருக்கையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளாகினர். 

இதில் வக்கீல் ராஜராஜசோழன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மகன் சேரலாதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

ஒரே விபத்தில் வக்கீல் ராஜராஜசோழன் மற்றும் மகன் சேரலாதன் இருவரும் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது அண்ணன், தம்பிகள் மற்றும் இதர உறவினர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக ராஜராஜ சோழன் தனது தாய்க்கு அப்பகுதியில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார். அவர் இறந்த பிறகு அவரது சடலமும் அவரது மகன் சடலமும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

இவரது இறப்பிற்கு வக்கீல் வட்டாரமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இருவரின் உடலுக்கு உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு அடக்கம் செய்யப்பட்டது. 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை அப்புறப்படுத்தி, இனி விபத்துகள் ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.