9 பேரை திருமணம் முடித்த பலே இளம் பெண்..! மேட்ரிமோனியல் மோசடி!

மேட்ரிமோனி இணையதளம் மூலம் ஒன்பது பேரை திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண், கடைசி கணவன் புகார் அளித்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத்தைச் சேர்ந்த நரசிம்மா வேணுகோபால் என்பவர் தன்னையும் தனது வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்ள பெண் வேண்டுமென மேட்ரிமோனி இணையதளம் மூலம் பதிவு செய்திருந்தார். இதைப் பார்த்த அருணா என்ற பெண் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இவர் நர்சிங் படைத்துள்ளதாக இணைய தளத்தில் பதிவிட்டு இருந்ததால், பெற்றோர்களை பார்த்துக் கொள்ள சரியான பெண்ணாக இருப்பார் என நரசிம்ம வேணுகோபால் நினைத்து திருமணமும் செய்து கொண்டார். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு அருணா நகைகளுடன் வீட்டைவிட்டு சென்றுள்ளார்.

சிறிய சண்டை என்பதால் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்த்த நரசிம்மா நீண்ட நாட்களாகியும் அருணா வீட்டிற்கு வராததால் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. அதனால் பிறந்த வீட்டிற்கு சென்று இருக்கலாம் என நினைத்து அருணாவின் பெட்டியை திறந்து விலாசத்தை தேட முயற்சித்தபோது, அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

ஏற்கனவே அருணா பலருடன் திருமணமாகி இருப்பது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பெட்டியில் பார்த்த நரசிம்மாவிற்கு தெரியவந்தது. உடனடியாக காவல் நிலையத்திற்கு விரைந்து அருணா மீது நரசிம்மா புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் புகைப்படங்களில் உள்ள நபர்களை விசாரித்ததில் அனைவரிடமும் பல லட்சம் ரூபாய் பணத்தை அருணா ஏமாற்றி இருப்பதும் ஓரிரு மாதங்களில் நாடகமாடி வீட்டை விட்டு வெளியேறி வெட்டு மொத்த தொடர்பையும் அவர்களிடமிருந்து துண்டித்து இருப்பது அம்பலமாகியது. 

இதனடிப்படையில் அருணா கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் மேட்ரிமோனி இணையதளத்தில் வயது முதிர்ச்சி காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கும் நபர்களையும் இரண்டாவது திருமணம் செய்யும் முனைப்பில் இருக்கும் நபர்களையும் குறி வைத்து அவர்களிடம் வேண்டிய அளவிற்கு பணம் பறித்த பிறகு நாடகமாடி தப்பித்து வேறு நபரை திருமணம் செய்ய திட்டமிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீசார் அருணாவை விசாரித்து வருகின்றனர்.