படிக்கும் போது இருந்தே காதல்..! பெற்றோரும் ஓ.கே..! ஆனால் 3வது முறையாக நின்ற திருமணம்..! காரணம் கொரோனா..! எப்படி தெரியுமா?

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பே இல்லையென்றால் தொடர்ந்து நிலவிய அசாதாரண சூழலால் 3 முறை திருமணம் தடைபட்ட சோகம் கேரள மாநில காதலர்களுக்கு நிகழ்ந்துள்ளது.


கோழிக்கோடு அடுத்த இரன்கிபலன் பகுதியை சேர்ந்த பிரேம் சந்திரன், சந்தோஷ் இருவரும் இளம் வயது முதலே காதலித்து வந்தனர். இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவர காதலுக்கு மறுப்பு தெரிவிக்காமல் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் இவர்களுக்கு 2018ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போதுதான் விதி விளையாடியது. கேரளாவையே அச்சுறுத்திய நிபாஸ் வைரஸ் வேகமாக பரவ, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டத்தில் சுமார் 17 பேர் பலியாகினர். இதனால் அசாதாரண சூழல் ஏற்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்சனை முடிந்து 2 மாதங்கள் கழித்து திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.

அப்போது மீண்டும் ஒரு சிக்கல் நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென இறந்துபோக பிரேம்-சந்திரா திருமணம் மீண்டும் தடைபட்டது. இதனால் இருவீட்டாரும் மிகுந்த வேதனை அடைந்தனர். இதற்கிடையே 2019ம ஆண்டு செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகையின்போது திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அப்போதுதான் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்தது. கட்டுக்கடங்காமல் வெள்ளம் ஓடியதால் கேரளாவே நிலைகுலைந்து போனது. இதனால் திருமணம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து ஒருவழியாக 2020 மார்ச் 20-ம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர்.

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட நிலையில், இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூட தடைவிதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது இந்த காரணத்தினாலும் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த இவர்களின் திருமணம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காதலுக்கு எதிர்ப்பால் பலருடைய திருமணம் தடைபட்டதை பார்த்திருக்கிறோம். ஆனால் காதலுக்கு எதிர்ப்பே இல்லாமல் இயற்கை சீற்றம் காரணமாக திருமணம் தடைபடும் சம்பவம் இவர்களுக்கு மட்டுமே நிகழ்ந்திருக்கும்.