தள்ளுவண்டி கடைக்காரர் ஆன இளம் என்ஜீனியர்! கரூர் பரிதாபம்!

என்ஜீனியரிங் பட்டதாரி ஒருவர், தள்ளுவண்டியில் உணவு விற்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூரை சேர்ந்தவர் ஜெய்சுந்தர். மாடர்ன் இளைஞரான அவர், என்ஜீனியரிங் படித்துவிட்டு, நல்ல சம்பளத்தில் செல் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். பின்னர், கோவை ப்ரீகால் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், வீட்டில் அம்மாவுக்கு உடல்நலம் இல்லாத காரணத்தால், சொந்த ஊருக்கு திரும்ப நேரிட்டது. அங்கிருந்தபடியே, புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்த ஜெய்சுந்தர், சில ஆண்டுகள் கழிந்தபின், பணிச்சுமை தாங்கமுடியாமல், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அந்த வேலையையும் ராஜினாமா செய்துள்ளார். 

அதன்பின், கரூர் பஜாரில் அடிக்கடி தள்ளுவண்டி கடைகளில் நொறுக்குத் தீனி வாங்கி சாப்பிட்டு வருவதை வாடிக்கையா வைத்திருந்த ஜெய்சுந்தர் ஒருநாள், பேசாமல், இதுமாதிரி தள்ளுவண்டி கடை ஒன்றை தொடங்கினால், என்ன என, யோசித்திருக்கிறார். வீட்டிலும், வெளியிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், மனம் தளராமல், தள்ளுவண்டி கடையை தொடங்கிய ஜெய்சுந்தர், தனது நண்பர்களின் உதவியுடன், கரம் மசாலா தயாரிப்பது எப்படி, விற்பது எப்படி என்ற வித்தைகளை கற்றுக் கொண்டார்.

கடை நடத்த வாடகை தர முடியாமல் அவதிப்பட்ட நிலையில், அதற்கும் கோபிநாத் என்பவர் முன்வந்து உதவிக்கரம் நீட்டியுள்ளார். தனது ஜூஸ் கடை முன்பே, கரம் மசாலா போட்டு விற்கும்படி, ஜெய்சுந்தருக்கு அவர் அனுமதி அளித்துள்ளார். இதன்பேரில், ஜெய்சுந்தர் கடை தொடங்கி, கடந்த 1 ஆண்டாக, கடும் உழைப்பை செலவிட்டு, தற்போது மாதம் ரூ.20,000 வரை வருமானம் ஈட்ட தொடங்கியுள்ளார். கருவூர் கரம் ஸ்டால் என்ற பெயரில் ஜெய்சுந்தர் நடத்தும் கடைக்கு, நாளுக்கு நாள் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து வருகிறது. உழைப்புக்கேற்ற வருமானம், மனசுக்கேற்ற வாழ்க்கை, இதுபோதும் என, மகிழ்ச்சி பொங்க, ஜெய்சுந்தர் தெரிவிக்கிறார்.