இந்துக்கள் பொறுமை இழந்தால்..! கோத்ராவில் நிகழ்ந்தது தான் நடக்கும்..! பாஜக அமைச்சரின் பகீர் எச்சரிக்கை!

பெங்களூரு: கோத்ரா சம்பவம் போல பெரிய வன்முறை வெடிக்கும் என்று, முஸ்லீம்களுக்கு கர்நாடகா அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.


நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் இஸ்லாமிய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவதால், பொதுச் சொத்து சேதமடைவதோடு, இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு பகுதியில் இஸ்லாமிய ஆதரவாளர்களின் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் உள்ளிட்ட தலைவர்கள் வன்முறையை முன்னின்று ஊக்குவிப்பதாக, குற்றம் சாட்டப்படுகிறது. இதுதவிர, கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு, காதர் நேரடி எச்சரிக்கையும் விடுத்திருந்தார். கர்நாடகாவில் குடியுரிமைசட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டால், அம்மாநிலமே பற்றி எரியும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.  

இதன்பேரில், கர்நாடகா சுற்றுலாத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சி.டி.ரவி பதிலடி கொடுத்துள்ளார். அதில்,   ''யுடி காதர் போன்றவர்கள், கோத்ராவில் என்ன நடந்தது என்பதை ஒருமுறை நினைத்துப் பார்க்க வலியுறுத்துகிறேன். முஸ்லீம்களின் அடாவடித்தனம்தான் கோத்ரா வன்முறையை பற்ற வைக்க காரணமாக அமைந்தது. காதர் போன்றவர்களின் பொறுப்பற்ற பேச்சுகள், பெரும்பான்மை சமூகமான இந்துக்களை உசுப்பேற்றும் வகையில் உள்ளது. அப்படி ஒருவேளை இந்துக்கள் கோபமடைந்தால், அது இன்னொரு கோத்ரா சம்பவமாகவே அமையும். அதனை காதர் போன்றவர்கள் நினைத்துப் பார்த்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

யு.டி. காதர் மற்றும் சி.டி.ரவியின் பேச்சுகள் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, மங்களூரு பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.