அத்திவரதன்! காஞ்சி அத்திவரதர் சன்னதியில் பிறந்த குழந்தைக்கு தெறிக்கவிடும் பெயர் சூட்டிய பெற்றோர்!

காஞ்சிபுரத்தில் தரிசனத்திற்கு வந்த பெண்ணுக்கு அங்கேயே பிரசவம் நடந்ததால் அந்த ஆண் குழந்தைக்கு அத்திவரதர் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் என அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அத்திவரதரை தரிசிக்கும் வாய்ப்பு ஆகஸ்ட் 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஜூலை 1 முதல் 31 வரை சயன கோலத்திலும் ஆகஸ்ட் 1 முதல் 16 வரை நின்ற கோலத்திலும் காட்சியளித்தபோது அவரை பார்த்து அருள்பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி விட்டது.

அத்திவரதர் தரிசின ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களில் பிறப்பு, இறப்பு, சர்ச்சை, சுவாரஸ்ய நிகழ்வுகள் என அனைத்து சம்பவங்களும் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது என்பது சற்றே வியப்புக்குரிய விஷயம்.

அந்த வகையில் வேலூர் மாவட்டம் பாணவரத்தை சேர்ந்த அசோக்குமார் - விமலா தம்பதி ஆகியோர் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்திருந்தனர். விமலா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை பார்த்த போலீசார் அவரை வரிசையில் நிற்கவேண்டாம் எனக்கூறி நேரடியாக அழைத்து சென்று அத்திவரதரை தரிசிக்க செய்தனர்.

தரிசனம் முடிந்து கோயிலை விட்டு வெளியில் வந்த விமலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே 16 கால்மண்டபம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்த மருத்துவர் ஜான்சிராணி மற்றும் மூத்த செவிலியர் வள்ளி ஆகியேர் விமாலாவுக்கு பிரசவம் பார்த்து அழகான ஆண் குழந்தையை உலகிற்கு கொண்டுவந்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விமலாவை அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள், பக்தர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பின்னர் அத்திவரதரை தரிசிக்க வந்தபோது குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு அத்திவரதர் என பெயர் சூட்டுமாறு பல்வேறு தரப்பினர் கேட்டுக்கொண்டதை அசோக்குமார் விமலா தம்பதியும் ஏற்றுக்கொண்டனர்.

நம்மில் பலருக்கு கடவுள் பெயர் வைக்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது பிறந்துள்ள குழந்தைக்கு வைக்கப்படும் அத்திவரதர் என்ற பெயர் கடந்த 40 ஆண்டுகளில் இது முதல் முறையாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.

அத்திவரதரை தரிசிக்கும் போது நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்தனர், பெண்களை போட்டோ எடுத்ததாக கூறி தாக்கப்பட்டதில் ஒரு இளைஞர் உயிரிழப்பு, ரவுடிக்கு விவிஐபி தரிசனம் செய்ய அனுமதித்தாக புகார், பணியில் இருந்து காவலரை ஆட்சியர் கடுமையாக கண்டித்ததாக விமர்சனம், குழந்தை பிறப்பு என ஜனனம் முதல் மரணம் வரை அனைத்து சம்பவங்களும் ஒரு மண்டலத்தில் நிறைவேறியுள்ளது.

மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பிறகு அருள்பாலிக்க போகும் அத்திவரதரை தரிசிக்க நாம் உயிரோடு இருக்கப்போவதில்லை. ஆனால் புதிய குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள அத்திவரதர் பெயரை உச்சரிப்பதற்கு கால நேரம் தேவையில்லை.