ரூ.1800 கடன்! குடும்பத்தோடு சென்று இளைஞரை கொலை செய்த கொடூரம்!

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டி பாளையத்தில், ஆயிரத்து 800 ரூபாய் கடன் பிரச்சனையில் கார் ஓட்டுநர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோபிச்செட்டி பாளையம் அருகே கடத்தூர் மில்மேட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநரான செந்தில் குமார் என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சின்ராஜ் என்பவருக்கு ஆயிரத்து 800 ரூபாய் கடன் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

6 மாதங்களாக கடனை திருப்பிக் கொடுக்காததால், சின்ராஜ் – செந்தில் குமார் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்றும் பிரச்சனை ஏற்படவே, இரவில் செந்தில் குமார் வீட்டிற்கு தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்ற சின்ராஜ், செந்தில்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

செந்தில் குமாரின் மனைவி மற்றும் தாயையும் அந்தக் கும்பல் மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கொலைச் சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே செந்தில் குமாரின் சடலத்தை உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளைக் கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

போலீசாரின் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்தனர். தலைமறைவாக இருக்கும் சின்ராஜ், அவரது மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்