கொரோனா பத்தி தெரிஞ்சுக்கணுமா… சும்மா இருக்கும் நேரத்தில் வைரஸ் படம் பாருங்க…

கொரோனா வைரஸ் போன்ற பாதிப்பைப் பற்றி காண்டாஜியன் ஆங்கிலப்படமும், டிரெயின் டு பூஷன் என்ற கொரியப்படமும் இப்போது வீடுகளில் செம ஹிட் அடிக்கிறது. அந்த அளவுக்கு நல்ல மலையாளப் படமான வைரஸ் ஏன் பாராட்டு பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.


மருத்துவத்துறை அதிகாரி வீட்டில் போன் ஒலிக்கிறது. ரிசீவரை எடுக்கிறார் அவர். மறுமுனையில் பேசும் பெண் மருத்துவர், "சார் மெடிக்கல் காலேஜ்ல வெண்டிலேட்டர்ஸ் எல்லாம் தீர்ந்து போச்சு. எதுவும் காலியா இல்ல. இனிமே பேஷன்ட்ஸ் வந்தா என்ன பண்றது?" என்று கேட்கிறார்.

இப்படித் தான் தொடங்குகிறது ‘வைரஸ்’ திரைப்படம். 2019-ம்ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்தத் திரைப்படம், தமிழ்,இந்தி, தெலுங்கு என்று பல்வேறு மொழிகளிலும் சப்டைட்டில்களுடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிய நாடுகளையே அச்சுறுத்தி, 2018-ல் கேரளாவில் ஒரு நர்ஸ் உள்பட 17 பேரின் உயிரைபறித்த நிபா வைரஸின் தாக்குதல் பற்றிய தத்ரூபமான காட்சிப்பதிவே இந்தப் படம். கரோனாவைப் போலவே சுவாசமண்டலத்தைத் தாக்கி, ஆரோக்கியமாக இருக்கும் மனிதனையும் சாகடிக்கும் கொடிய வைரஸான நிபா எப்படி மனிதர்களுக்கு வந்தது, அது எப்படி பரவியது,

அதை எப்படி கேரள அரசாங்கம் கட்டுப்படுத்தியது என்பதை ஆவணப்பட தன்மையோ, பிரசாரத்தன்மையோ இல்லாமல் ஒரு த்ரில்லர் போல விறுவிறுப்பாகச் சொன்ன படம் இது. இந்தப் படத்தை நமது தொலைக்காட்சியினர் யாராவது வாங்கி தமிழில் டப் செய்து வெளியிட்டால் செம ரேட்டிங் அள்ளலாம்.